சிரிப்பிலக்கியம் -------அஹமது அலி-----

குதலைச் சந்தங்களில்
குறும்பாக்கள் படிக்கிறாய்
குறுமயக்கத்தில் நினைவு மெல்லச் சாக
குற்றாலச் சாரலாய் சிலிர்க்குமுன் சிரிப்பு
நான் அருந்தும் குளோரோபார்ம்..!
😄😄😄😄
ஈரடி மூவடி நான்கடிஎன
சீரடியில்லா சிரிப்பொலி புரிகிறாய்
இலக்கியத்தில் இது என்ன வகை?
ஓ...ஈரடி இதழ் வெண்பா....!
😄😄😄😄
பொன்னழகும் பொருளழகும் சூடிப்
பேரழகுப் பேரொளி சிந்தும் போதும்
நகையலங்காரமே நங்கையுனது
சீனிச் சிங்காராம்..!
😄😄😄😄
பெருஞ்சினப் புயலையும்
குறுநகை பூக்களால் பூப்பெய்து
விலங்கிடும் விசேட விஞ்சை
வித்தகச் சந்தை..!
😄😄😄😄
ரத்தினங்கள் முத்தினங்கள்
மாணிக்க மரகதங்கள்
மங்கிடுமுன் நகையொளியில்
மங்காச் சுடராய் விரியுமந்த
சூரியகாந்தம்....!
😄😄😄😄
மெளனப் புன்னகை அகநானூறா
அகலப் புன்னகை புறநானூறா
குறும்புப் புன்னகை குறுந்தொகையா
எதில் சேர்ப்பதுன் சிரிப்பழகை?
😄😄😄😄
எவற்றிலும் அடங்காத உன் சிரிப்பை
யாவற்றையும் விஞ்சுமுன் இதழ் விரிப்பை
சிற்றிலக்கியம் பேரிலக்கியம் தவிர்த்து
சிரிப்பிலக்கியம் செய்கிறேன்..!

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (20-May-15, 10:04 am)
பார்வை : 708

மேலே