ஒட்டு உறவாடி ஒற்றுமை உடை உடுத்தி

ஓ! அது கிளியா
அதன் வனப்பென்னை
சொக்க வைக்குமே
அதனெழில் என்னை
கொஞ்ச வைக்குமே

அடடா !
அதன் அலகின் நிறம்
அட்டகாசமான் சிவப்பு
கிள்ளையது பேசுவது
பிள்ளை மொழியல்லவா !

அடே அங்கே பார்
பஞ்சவர்ண தத்தை
என்னே !இயற்கையின்
விந்தை எத்தனை அழகு
அதன் இறக்கையில் ....

இது புறாவாயிற்றே
இது தூது செல்லுமே ..
மரகதப் புறா ,மாடப் புறா
மணிப்புறாவென எத்தனை
எத்தனை ரகம் ....

இதோ இதோ ஒரு
அழகு மயில் இன்னும்
சிறிது நேரத்தில் தோகை
விரித்தாடும் இருந்து பார்க்கலாம்

இதன் அழகினை கண்ணார
ரசிக்கலாம் அதன் இறகு
ஒன்றை கொண்டு சென்று
புத்தக நடுவில் வைக்கலாம் ...

குட்டி ஓன்று போட்டால்
அதை கொண்டு விளையாடலாம்
அட அடா என்ன மனிதர்கள் ..

இதை எல்லாம் கண்ட
கருநிற காகமொன்று -இப்போது
நன்கு குளித்து நயம்பட

ஒட்டு உறவாடி ஒற்றுமை
உடை உடுத்தி ஊர்வலம்
வருகிறது இந்த மனிதர்கள்
நமக்கான வசனத்தை மட்டும்
சொல்வார்களா இல்லை வர்ணித்து
இன்றாவது நம்மை ரசிப்பார்களா

இல்லை பொழுது விடிந்தது
என்று மீண்டும் அந்த
கிளியையும் ,மயிலையும்
புறாவையும் ரசிக்கச் சென்றுவிடுவார்களா
என்ற ஏக்கத்தோடு .....

எழுதியவர் : ப்ரியாராம் (22-May-15, 4:45 pm)
பார்வை : 116

மேலே