கணக்கு
பத்து
ஒன்பது
எட்டு
.
.
.
.
ஒன்று
"உங்களுக்கான
நேரம்
முடிவடைகிறது
பென்சில்களை
மேசை மேல்
வைக்கவும்" ..
இறுக்கமான
கணப்பொழுதுகள் ...
இறுதித் தேர்வுகள்
யாவுமே
இப்படித்தான்
முடிவடைகின்றன...
தொடர்ந்து
எழுதுவதா
இல்லையா
என்பதை
திறமை மட்டும் அல்ல
விதியும் கூடத்தான்
தீர்மானிக்கிறது
கை குலுக்கி
விடைபெற்று
ஆளுக்கொரு திசையில்
செல்லும் பயணம்
மீண்டும் சந்திக்கலாம்
இல்லாமல் இருக்கலாம் ....
பரபரக்கும்
ஜவுளிக்கடை
சர சரக்கும்
நெகிழிப்பைச் சத்தம்
புதுப் புடவை வாசம்
அங்காடித் தெருக்களில்
தொங்கும்
புது உலககங்கள் ...
அங்குமிங்குமாக
மேசை மேல் கிடந்த
புடவைகளை
மடித்துக்
கொண்டிருந்தவள்..
அப்படியே
போட்டு விட்டு
காஞ்சி புரம்
பனாரீஸ்
ஆர்ட் சில்க்
காட்டன்
என்ன பாக்கிறீங்க..
கண்களை
நம்ப முடியவில்லை
பார்த்துக் கொண்டே
இருந்தேன்.......
வகுப்பில் எப்போதும்
கணக்குப் பாடத்தில்
முதலில் வரும்
சத்தியாவா இது..
அப்புறம் பேசலாம்
அவளே கூறினாள்...
முதலாளி அம்மாவின்
கழுகுக் கண்களில் பாடாது
கைபேசி இலக்கத்துடன்
அவள் கைக்குள்
திணித்துக் கொண்டேன்
பட்டுப் புடவை ????
கணக்குப் பார்த்தேன்
காட்டன் புடவை
இப்போதைக்குப் போதும்..
எப்போதும் எல்லாக்
கணக்குகளும்
சரியாக இருப்பதில்லை
இந்த சத்தியா கணக்கும்
கூடத்தான்....
அவள் கண்கள் கூறிற்று .
கொஞ்சம் புன்னகை
நிறைய சோகம்
அவள் அங்கேயே
நின்றுகொண்டிருந்தாள்
வெளியே வரும்போது
நெகிழிப்பைகள்
சத்தம் கேட்கவில்லை
புதுப் புடவை வாசம்
பிடிக்கவில்லை
வழி நெடுக
மனம் மட்டும்
ஊமையாய்
அழுதுகொண்டே
இருந்தது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
