வீழ்ச்சியே எழுச்சி----அஹமது அலி----

வீழ்வது
எழுச்சிக்கே...
வீழ்ந்தால் தானே
எழ முடியும்!
வீழாமல் எழுவது
சத்தியமா?-அது
சாத்தியமா?
///////
அடிவானில் வீழும்
ஆதவன் அனுதினமும்
அறிவுறுத்தும் அறிவுரை எது?
வீழ்வேன் -பிறகு
எழுவேன்!-அது என்
விடியல்!
///////
விதை சொல்லும்
விளையலின் ரகசியம் என்ன?
புதையுண்ட போதே
பூமி பிளப்பேன்!- அது என்
வளர்ச்சி!
///////
கிளையுதிர்ந்து வீழும் இலைகள்
சருகாகும் முன் உதிர்க்கும் மொழி?
நானுதிர்வேன்!
கிளை துளிர்க்கும்-அது
செழுமை!
//////
முகில் முத்துக்கள்
மண்ணில் வீழ்கையில்
வினவிடச் சொல்லி விளங்கிடத் தருவது?
முத்துக்கள் வீழாமல்-இல்லை
வித்துக்கள்!
///////
வீழாமல் எழுச்சி
எங்கனம்?
தவழாத குழந்தை
நடை பழகுவதில்லை!
//////
தோல்வி பழகாத வெற்றி
தோற்கத் தாங்காது!
தோல்வி பழகிய வெற்றி
தோற்றாலும் தளராது!
.........................................................

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (23-May-15, 10:28 am)
பார்வை : 613

மேலே