பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி

"அவரது சொந்தங்கள்" - பொள்ளாச்சி அபி.

படைப்பாளிகளான எழுத்தாளர்கள் பற்றிய அருமையான, நிதர்சனமான படைப்பு, இந்த கதை.

அறுதியிட்டு கூற முடியாத காலம், ஒரு மனிதனின் அந்திமக் காலம். தன் வாழ்நாள் முழுவதும் ஒருவன் கடந்து வந்த பாதைகளும், ஏறிய படிக்கட்டுகளும் முற்று பெரும் இடம், அவனது மரணத் தருணம்.

வாழ்நாளில் தான் படைத்து உலாவ விட்ட கதாபாத்திரங்கள் பற்றிய நினைவுகள் மட்டும்தான் எழுத்தாளர் ஞானபாரதிக்கு மிச்சமானது, என்கிற சாரம்தான் அபி அவர்கள் எழுதிய "அவரது சொந்தங்கள்".
இந்த கதையில் அபி அவர்கள் கையாண்டிருக்கும் நடை ஒரு ஊர்வன போன்றது, மெதுவாக அதே நேரம் நிலையாக சிறு ஓட்டம் கொண்டிருப்பது.
தனக்கென்று இருந்த ஒரே சொந்தமான மனைவியும் குழந்தை பேறு சமயத்தில் தவறிவிட்டதால், பிரம்மாவாக மாறி ஞானபாரதி படைத்து விட்ட கதாபாத்திரங்கள் பற்றி அபி அவர்கள் நயமாக சொல்லி இருக்கிறார்.
எந்த ஒரு மனிதனுக்கும் வாழும் நாளில் இல்லை என்றாலும் அவனது கடைசி காலத்தில் ஞானம் தோன்றும், வாழ்வின் நிதர்சனம் புரியும், என்பதை மிகச் சரியாக சொல்லி இருக்கிறார்.
இந்த கதையின் தொடக்கத்தில் மழை வருவது போன்ற அறிகுறி ஒரு குறியீடு. ஞானபாரதியின் மறைவு தரும் பெரும் துயரம், பெரும் ஓலமாக மாரியப்பனிடம் இருந்து வெளியாகிறது. இயற்கையோடு கலந்து விட்டார் ஞானபாரதி, மழை கொட்டித் தீர்க்கிறது.
ஞானபாரதி என்ற படைப்பாளியின் உள்ளத்தின் ஊடே தெரிவது அபி அவர்களின் ஆதங்கமும், நிதர்சனம் உணர்த்தும் உண்மையும்.
வீடு வரை உறவுமில்லை, வீதி வரை மனைவியும் இல்லை, காடு வரை வர பிள்ளையும் இல்லை, கடைசி வரை ஒரு எழுத்தாளனுடன் வருவது அவனது படைப்புகள் மட்டுமே.
ஞானபாரதி எழுதாமல் விட்ட கதாபாத்திரமான, எழுதாமல் கிடைத்த சொந்தமான மாரியப்பன் தான் அவரின் படைப்புகளை விட உயர்வானது என்பதே என் கருத்து. பொள்ளாச்சி அபி அவர்களும் அவ்வாறே சொல்லி இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
அற்புதமான இந்த படைப்பை வழங்கிய பொள்ளாச்சி அபி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்.

அறிவிப்பு - இந்த கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த படைப்பே.

எழுதியவர் : அரவிந்தன்078 (26-May-15, 12:06 pm)
சேர்த்தது : அரவிந்தன்078
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே