பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறானாய்வு போட்டி குருவிக்கார குமாரு
பொள்ளாச்சி அபி அவர்களின் "குருவிக்கார குமாரு " கதை மனிதனின் சுயநலத்தை வெட்ட வெளிச்சமாய் காட்டுகிறது.
மனிதன் தன் செளகரியத்திற்காக அப்பாவி குருவியைக் கூட விட்டு வைக்கவில்லை என கதையில் சொல்லும்போது
நிச்சயமாக குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. குருவிகள் கூடு கட்டுவதும் , ஜோடிகள் ஒற்றுமையாய் தன் கடமையைச் செய்வதும் ஆசிரியர் அழகாக சித்தரித்துள்ளார்.கடமையைச் செய்வதில் ஆண்,பெண் பாகுபாடு பார்க்காததை குருவியின் வாழ்க்கை மூலம் ஆசிரியர் பதிவு செய்கிறார். குருவி வீட்டில் கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்ற
நம்பிக்கை இருந்தது .அதனால் குருவிகளின் இனப்பெருக்கம் மிகுதியாகவும் இருந்தது.இது மூட நம்பிக்கை என்றாலும்
குருவிகள் இனம் அழியாமல் இருக்க உதவியது.ஆனால் குருவியை கொன்று தின்றால் ஆண்மை கூடும் என்ற மூட நம்பிக்கை குருவிக்கே எமனாக முடிந்தது.இக் கதையில் குமாரின் மனசு போல கதையைப் படிப்பவரும் குருவி பத்திரமாக இருக்கட்டும் என்ற நினைப்பதுவும் , பின் குமாரின் மாமாவால் குருவி சூறையாடப்பட்டது தெரிந்ததும்
மனது கஷ்டப்படுவதும் ஆசிரியர் கதையை ஆணி அடித்தது போல் பதிவு செய்த நேர்த்தி பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் "ஏய் மனிதா! உன் வசதிக்காக இயற்கையையும் ,மற்ற உயிரினங்களையும்
அழிக்கும் நீ இன்னும் என்னவெல்லாம் அழிக்கப் போகிறாய்?"என்று கேட்பது போலிருக்கிறது.