எழுதுகோல்
எனதெழுதுகோலில்
உயிர் "மை " நிரப்புகையில்
இறக்கை விரித்து
கூடு விட்டுக்
கூடு பாய்கிற
விக்கிரமாதித்ய படையல்களின்
குதிரைத் திறனால்
கண்டம் விட்டுக்
கண்டம் தாவுமெனது
எழுதுகோல்
தனக்குத் தானே
முடிசூட்டிக் கொள்கிறது !
எனதெழுதுகோலில்
பத்துத் தலைகள் முளைத்து
ராவணத்துவத்தை
உமிழ்கையில்
மாரீசப் பொன்மானொன்று
துள்ளி -
சீதைகளின் தொடமுடியா
துரத்தலின் வனப்பாய்ச்சலில்
இதிகாசம் துளைத்துக்
காப்பியமாகிறது !
உயிர்களைக் கொன்று
குவித்தயெனது
எழுதுகோலின் சாம்ராட்கள்
மாபெரும் பிராயச்சித்தமாய்
மன்னித்தலின் சாலைகளெங்கும்
மரங்களை நடுகின்றன !
கைகேயியின் காகிதத்தில்
எழுதக்கூடாத
சத்தியத்தை எழுதியயெனது
எழுதுகோல்
தசரதக் கொடுந்துயர்கொண்டு
தூக்குத் தண்டனை
தீர்ப்பெழுதிய நீதிபதியின்
எழுதுகோல் முறிப்பென
தனது முள்ளை
தானே முறித்து
மரணித்துக் கொள்கிறது !
தூராம் தாண்டிக்
காதல் தூதேந்திப்
பறக்கிறயெனது எழுதுகோல்
தாஜ்மகாலின் மீது
வினாக்குறியை குவித்து
ஒரு கல்லறை
காதலின் கருவறையாய்
மாறிய கதைகளின்
எழுத்துக்களால்
பொற்கூரை வேய்கிறது !
எழுதுகோல் பிடிக்குமெனது
வலதுகை விரல்களின் வழி
மனதால் உயிர்வுருகி
காகிதத்தில் பாசனம் செய்து
வார்த்தைகளை விளைவிக்கையில்
கவிதையின் நெல்மணிகளை
யானைகட்டிப் போரடிக்கும்
பெரும்பேர் பெற்றதெனது
கவிதைகள் .