தாய்

சொல்லவே முடியாத் துயரில்
சோர்ந்தே விழுந்தாலும் மழலையை
மெல்ல எடுத் தணைத்து
மேனியை இதமாய்த் தடவி
வெல்லக் கட்டி என்றும்
வேங்கையின் மகனே என்றும்
செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
சேயினைக் காப்பாள் அன்றோ? 1

காலை எழுந்த உடன்
கடிகாரம் கடிது ஓட
சேலையை சரியாய்க் கட்ட
சிறிதுமே நேரமும் இன்றி
வேலை செய்து கொண்டே
விரைவாய் இடையில் வந்து
பாலை வாயில் இட்டு
பக்குவமாய் சுவைக்க வைப்பாள் 2

சத்துணவு நமக்கே தந்து
சுவையுணவு மறந்த போதும்
பத்தியம் பலவா ரிருந்து
பகலிரவாய் விழித்த போதும்
நித்திய வாழ்க்கை தன்னில்
நிம்மதி இழந்த போதும்
சத்தியத் தாய் தன் அன்பில்
சரித்திரம் படைத்தது நிற்பாள் 3

பச்சிளம் பாலகன் தன்னை
அம்மா என்றழைக் கும்போதும்
அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
அறிஞனாய் ஆகும் போதும்
மெச்சி அவன் புகழை
மேலோர்கள் சொல்லும் போதும்
உச்சியே குளிர்ந்து போவாள்
உவகையில் திளைத்து நிற்பாள் 4

பேய்குணம் கொண்டே பிள்ளை
பெருந்துயர் தந்திட் டாலும்
சேய்குனம் சிறிதும் இன்றி
சிறுமையை அளித்திட் டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
நல்லன மறந்திட் டாலும்
தாய் குணம் மாறா தம்மா
தரணியில் உயர்ந்த தம்மா! 5

விண்ணைத் தொடும் அளவு
வளர்ந்திட்ட தென்னை போல்
என்னையே எடுத்துக் கொள்
என்றீயும் வாழை போல்
தன்னையே நினையா நெஞ்சம்
தன்னலம் பாரா நெஞ்சம்
அன்னையின் அன்பு நெஞ்சம்
அவனியில் இதை எது மிஞ்சும் 6






எழுதியவர் : டி.என் . முரளிதரன் (8-May-11, 8:44 am)
சேர்த்தது : T.N.MURALIDHARAN
Tanglish : thaay
பார்வை : 577

மேலே