முன்பொரு காலத்து பேய்கள்

மீண்டும்
மீள் வருகையிநூடே
உயிர்த்தெழகின்றன பேய்கள்
ஆவியோட்டியின் அடக்கம்
சவால்களை தோண்டிவிட
அரச மரத்து பேய்கள் எல்லாம்
காலை சுற்றியும்
கண்டங்கள் தாண்டியும்
முருங்கைகளை முறித்துக்கொண்டு
வீராப்பு
“வே”(வீ)ம்புகளில் அலைகின்றன..
காடு பற்றி எரிந்த
கங்கில்களிலிருந்து
துளசி செடிகள் துளிர்விட
விதை இட்டவனும்,வேர் நட்டவனும்
இளைப்பாற எத்தனிக்கும்
நிழல்வாகை அடியிலும் நிற்கிறது
வழி மறித்து ஒரு காவிப் பேய்
பல்லை கடித்துக் கொண்டு பாய ஏதுவாய்
மரத்தால் வீழ்ந்தவனை
மறித்து வெட்டும் மாடாய்
முட்டிக்கொண்டு கொம்பு கோர்த்து
புத்த தர்ம போதனைகள்
யுத்த தர்ம சாதனைகளாய்
யுகங்கள் கடந்து கொலைத் தவ
கொள்கை பரப்புகின்றன
மண் பற்று என்னும் மமதையில்
ஒரு நாள் இல்லாவிடில் ஒருநாள்
சட்டியிலிருந்து
அடுப்புக்குள் விழுந்த கதையாய்
தம்ம பதம் போகுமென்று பேய்களுக்கு
புரியாமலுமில்லை
மாமிச உண்ணிகளாய் பேய்கள்
மதம் பிடிக்க
ஆதாமின் ஆப்பிள் தோட்டமெங்கும்
தசையும்,பிண்டமுமாய்
இன சுத்திகரிப்பு எனும் பெயரில்
இரத்த ஈறுகள்
ஆயினும்;
பேய்களிடம் சொல்லியாக வேண்டும்
காற்றென்பது
எல்லா பக்கமும் இருக்கிறது
சுமுகமானால் தென்றல்
சுழன்றடித்தால் சூறாவளி என..
பேய்களே,பேய்களே
ஈரக்குலை தின்னவா
இப்போதைய ஈன அவதாரம்?
அறியுங்கள் பேய்காள்
உங்களை வீழ்த்த
ஆவியோட்டி அவசியமில்லை
“குர்ஆன்’ய மக்கள் மேல்
இறைவன் இரங்கினால்
ஒரு வெட்டியான் மூலம்
வந்த இடம் தெரியாமல் வழியனுப்புவான்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.