அம்மாவின் நினைவில் எண்ணத்தில் கொடுத்தவைகளின் ஒரு தொகுப்பு

அம்மாவை நினைத்து..
அறுசீர் விருத்தம் - நான்கு காய்ச்சீர்கல், இரண்டு மாச் சீர்கல் கொண்டதுவாக --

பிறப்பித்தாய் பல்லிடர்கள் உனுட்தாங்கிப் புதுப்பிறவி பெற்று வந்தாய்!
சிறப்பித்தாய் பலர்முன்னும் சீரியபல் லிதமான சொல்லி வைத்தாய்!
நிரப்பித்தாய் உன்னுளென் நினைவுகளை பூரித்தே நின்று பார்ப்பாய்!
ஒருப்பித்தாய் என்,நினைவு களிலன்றோ தினமும்,நீ உலவி வந்தாய்!
நெருப்பில்தான் வைத்துன்னைக் கடன்,தீர்த்த தாய்ச்சொல்லி நிற்கின் றேனே!

அறுசீர் விருத்தம் - ,விளச்சீரில் தொடங்கி விளமும், மாவும் கலந்து வருவதாக...

அழகிய நிலவைக் காட்டி,
***ஆரதில் உள்ளார் என்ற
பழங்கதை படித்துப் பேசிப்
***பாலுடன் கலந்து நன்கு
குழையமு தூட்டி னாளின்
***குறுயே சிறுத்த வாயில்
பிழைமகன் வேகா நின்ற
***பிடியரிசி யிடுகின் றேனே! 02

பஞ்செரி யுற்ற தென்னும்
***பார்வையால் துயரம் போக்கும்
அஞ்சனக் கண்கள் இன்றேன்
***அடியவன் வருத்தம் காணாத்
துஞ்சலில் மூழ்கி நிற்கும்
***தூங்கிடல் நடிப்போ? வாழ்வில்
எஞ்சிய நாட்க ளில்,யான்
***எவர்முகம் நோக்கு வேனோ? 03

அறுசீர் விருத்தம்- மாச்சீரில் தொடங்கி விளம் இடையிட்ட மாச்சீர்களுடன் வருவது...
அளவடி என்னும் நான்கடிகளைத் தாண்டி ஓரடி அதிகமாக்கி எழுதப்பட்டுள்ளது..

நீருள் ளளவும் உன்,கண்
***நீரினை நினைத்தோ வாழ்வேன்?
பாருள் அமைதி எந்தப்
***பாவையின் மடியில் உண்டோ?
போருள் ள,வாழ்வில் யாரைப்
***புகலெனப் போய்நிற் பேனோ?
யாரே மடிதந் தாற்றி
***யமனையும் விரட்டு வாரோ?
ஊரே எனைப்ப ழிக்க
***ஒன்றாக்க் கூடி னாரோ? 04

கலிப்பா வகையினது..
பார்த்தாளைப் பாலூட்டிப் பாடுபட்டுத் தன்னுடலும்
வேர்த்தாளை பிறர்முன்னே வியந்தாளை வெற்றியிற்கண்
நீர்த்தாளை நினைவுகளில் நிலைத்தாளை நெருப்பெடுத்துப்
போர்த்துவதோ கைம்மாறு பொய்யோ,இவ் வுலகவாழ்வு! 05

அறுசீர் விருத்தம்- மாச்சீரில் தொடங்கி காய்ச்சீர் நிரவி மாச்சீர்களுடன் வருவது...

கச்சை அவிழ்த்துக் கனகமுலை தந்தவளைக் கால்பி ணித்துக்
கொச்சைப் படுத்திக் கூறுவதோ பிணமென்று! கொண்டு காட்டில்
அச்சம் விடுத்தே அனல்மூட்டி மொட்டையிட்டே அம்ம யிர்போல்
துச்சம் எனவே தூக்கி,எறி யும்வாழ்வும் தொடரத் தானோ? 06

அறுசீர் விருத்தம்- விளச்சீரில் தொடங்கி காய்ச்சீர் இடையிட்ட மாச்சீர்களுடன் வருவது...

ஊனோடு குருதி தந்தாய்!
***உன்மடி உறங்கத் தந்தாய்
தேனொடு பாலும் ஊட்டித்
***திடமுடன் வாழச் செய்தாய்!
கூன்விடு நிமிர்ந்து நில்லு
***கொள்கையில் சிறப்பாய்! என்று
மேன்மைகள் தந்தாய் நானோ
***மேனிக்கோ எரி,தந் தேனே! 07

முப்புரம் சிவன்,எ ரித்தான்;
***முன்னொரு வனத்தை அந்த
ஒப்பிலா அனுமன் தீய்த்தான்!
***ஒருமகள் மதுரைக் கிட்டாள்!
கப்பிய பசித்தீ என்னுள்
***களைந்தவள் மேனிக் கிட்டேன்
ஒப்பி,நீ எரித்த தேனோ?
***ஒண்மை,நீ எரித்திட் டாயோ? 08

(கப்பிய =மூடிய, மூண்ட; ஒண்மை=நல்லறிவு,;)

கரிசனம் நெஞ்சில் தூக்கிக்
***காட்டிய பாலால் அன்றோ
தரிசனம் பலவும் கண்டேன்;
***தடுக்கிவீழ்ந் திட்ட போதும்
சிரிசனத் தினரின் முன்னே
***சீக்கிரம் எழுந்தேன் நின்றேன்!
எரிசிதைக் குள்,ம தங்கள்
***இயம்பிய எரித்திட் டேனோ? 09

(கரிசனம்= அன்பு,அக்கறை, பரிவு; தரிசனம்= காட்சி; சொப்பனம்;
அறுசீர் விருத்தம்- விளச்சீரில் தொடங்கி மாச்சீர்கள் கலந்து, அளவடி மிஞ்சிய ஓரடி அதிகப்படுத்தி எழுதப்பட்டது..

எய்த,எம் பழிகட் கெல்லாம்
***இவள்மொழி ஊரைக் கொல்லும்!
வைத,என் சொற்கள் கேட்டும்
***வாய்த்த,என் நிலை,வ ருந்தும்!
செய்தவம் இல்லா ருக்கும்
***செய்தவன் கொடை,தாய் ஆகும்!
கைதவம் உடைய பேர்க்கும்
***கடவுளின் கருணை தாயே!
செய்தவம் சேர்த்துப் பார்த்த
***சிறியன்,என் தம்பிக் கன்றோ? 10
( எய்த= அடைந்த; கைதவம்= கபடம்)

அறுசீர் விருத்தம்- விளச்சீரின் தொடங்கி மாச்சீர்கல் கலந்துவருவது..

கவலுவான் மடியில் இட்டே
***கவலைநெஞ் சேற்று நிற்பாள்!
குவலயம் பழித்த போதும்
***கொஞ்சுவாள் அணைத்துக் கொள்வாள்!
சவலையர் நாமெல் லோர்க்கும்
***சாமிகை விட்ட போதும்
அவலமே தாங்கத் தந்த
***அருட்கொடை தாயே அன்றோ? 11
( கவலுவான்= கவலைப்படுபவன்;சவலையர் =இளங்குழந்தைகள்;)

திவலையர் பிள்ளை யானால்
***திரட்டிடும் கைகள் தாயே!
தவலை,அத் தாயால் அன்றோ
***தங்குவோம் ஒரு,கட் டிற்குள்!
துவலைகள் தாயா லன்றோ
***துறைகள்என் றாகப் போகும்!
சிவல்,அவள் சேர்த்த கற்கள்
***செய்,ஒலி குடும்ப மன்றோ? 12

(திவலை= சிதறும் துளி; தவலை= அகன்ற வாயுடைய பாத்திரம்; துவலைகள்=மழைத்துளிகள்;சிவல்= கிலுகிலுப்பை;)

========================== =============================

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (31-May-15, 1:24 pm)
பார்வை : 170

மேலே