மாலை தழுவிய இரவு
அத்துவானத்து
நெற்றியில் -
செந்தூர சாந்து பொட்டாய்
மாலைச் சூரியன்
மெல்ல மெல்ல சாய ;
அலுவல் முடித்து
வீடு (கூடு) திரும்பும்
பறவைகள் -
கூட்டுக் குடித்தனத்தை
மரக் கிளைகளில்
துவக்க ;
ஓய்வெடுக்கத் தோதாய்
வெளுத்த வானம் -
தன் மேல்
கருஞ்சாயம் பூச ;
காற்றின் வருடலால் -
இலைகள் - தத்தம்
உடல் அசைத்து
இசை எழுப்ப ;
கிளைகள் - உற்சாகத்தில்
இசைந்து ஆடின.
இராப்பூச்சி -
தனக்குத் தெரிந்த
சுருதியில்
உரத்த குரலில்
ஒலி எழுப்ப ;
கிணற்றுத் தவளைகள் -
கர கரப்பாய்
ஜதி சொல்ல ;
கடன் வாங்கிய
ஒளியால் -
ஒளிரும் நிலா
குழி விழுந்த
முகத்துடன் -
மேகத்திடை
வலம் வர ;
ஆங்காங்கே -
வானத்து மின்மினிகள்
கண் சிமிட்ட ;
மலர்கள் - சிலிர்த்து
நிலப் படுக்கையில்
விழ ;
குளிர்ந்த ஒளி ;
மனதை நெருடும் காற்று ;
ஓசைகள் மௌனித்த நேரம் ;
மலர்களின் சுகந்தம் ;
மாலை -
மெது மெதுவாய், இதமாய்
இரவைத் தழுவ...!
பனித் துளிகளாய்
வியர்வை.
விடிகையில் -
முகம் சிவந்தது !
இரவு.