இரவுக் குருவி
என் இரவின்
கதவைத் திறந்த ஒரு சிறு குருவி
பறக்கத் துவங்கியது கூடு விட்டு.
பறத்தலின் சுகம் அறிந்த அது...
காற்றின் நிசப்தத்தில்
ஓசையைத் தூவியபடி...
மரங்களற்ற பரப்பொன்றில் நீள்கிறது.
யாரும் பதிக்காத கால் தடங்களில்
நிழலற்ற அதன் அசைவை இரசித்தபடி...
நிகழ்கிறது அதன் பிரிவு.
தூக்கத்தின் வெளிச்சம் ததும்ப...
மழையென நனைக்கும் பிரியத்தில்...
எல்லாத் திசைகளிலும் உதிரும் சொற்களை...
மரங்களில் பூக்களாக்கியபடி...
நட்சத்திரங்களால் இரவுக்கு ஒளி பூசியபடி...
பறந்து செல்கிறது என் இரவுக் குருவி.
நிகழ்வின் பிறிதொரு கணத்தில்...
என் பிதுங்கிய கனவொன்றில்
முளைத்த கவிதையை
என்னிடமிருந்து திருடியபடி...
வளைந்த புல்லாகிவிடும் என் உடலில்...
புல்லின் நுனியில் விளைந்த
என் கண்ணீர்த்துளியை இரசித்தபடி....
என்னிடமிருந்து பறந்து செல்கிறது
என் இரவுக் குருவி.