பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி - அவள் அப்படித்தான்
'அவள் அப்படித்தான்' தலைப்பே சொல்லி விடுகின்றது அந்த அவளுக்கே உரித்தான ஏதோ குணாதிசயம் பற்றிய கதையென்று. ஆனால் அதோடு நிற்கவில்லை ஆசிரியர். அந்த அவள் அதாவது காமாட்சி ஆத்தா என்கிற கதையின் முக்கிய கதாபாத்திரம் மூலம் ஒரு அருமையான சமூக விழிப்புணர்வு ஒன்றை தனக்கே உரிய பாணியில் கதை மூலம் ஊட்ட நினைத்து அதில் முழு வெற்றியும் பெற்றுள்ளார் .
காமாட்சி ஆத்தா மன உறுதியும் அன்பும் பாசமும் வைராக்கியமும் கொண்ட சாதாரண கிராமத்து மூதாட்டி. வாழ்க்கையை அவள் காணும் கண்ணோட்டம் வித்தியாமானது.வளர்த்து பெரிய நிலையில் ஆளாக்கிவிட்ட தாயை வயதான காலத்தில் புறக்கணிக்கும் மகனைப் பற்றி காமாட்சி ஆத்தா சொல்லுகின்ற வரிகள்
"காக்கா வளத்துவுட்ட குஞ்சு பெரிசா வளந்த பின்னாடி, எந்தக் காக்கா போயி,
எனக்கும் சேத்து தீனி பொறுக்கிட்டு வா..ன்னு சொல்லுது".
தன்னைத் தோற்கடிக்க முயன்றவர் களை, தனியாகவே எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்ற பெருமிதம் என்று ஆசிரியர் எழுதிய வரிகளில் புரிந்து கொள்ள முடிகின்றது அந்த பெண்மையின் வைராக்கியம் . வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக சாயும் தராசு, பொட்டலம் கட்டுமுன் குழந்தைகளுக்கு என்று கூடுதலாகப் போடுகின்ற ஈரல் துண்டு எல்லாம் அவளின் வியாபார யுக்தியை மட்டுமல்ல கனிவையும் காட்டத் தவறுவதில்லை. கோபாலு என்கிற அநாதை சிறுவனை பன்னிரண்டு வயதிலிருந்து தன்னோடு வைத்து காப்பாற்றும் ஆத்தா அவனை தனது எடுபிடி வேலையாளாக மட்டும் வைத்திருக்கவில்லை என்பது முடிவில் அவள் இறக்கும் தருவாயில் அவனுக்கு வீட்டையும் சேமிப்பு பணத்தையும் உயில் எழுதி வைத்திருப்பது அவளின் பாச உணர்வையும் அதன் மூலம் அவள் உணர்த்தும் நீதியையும் காண முடிகின்றது. அவளின் குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் அவளுக்கென்று ஒரு நேர்மையான பாதையில் நடைபோடும் ஒரு கண்டிப்பான கிராமத்துப் பெண்மை.
இந்தக் கதையின் ஒரு சிறப்பம்சம் ஆசிரியர் முடிவில் சொல்ல முற்படும் சமூக விழிப்புணர்வுக்கும் கதையின் களத்துக்கும் உள்ள ஒரு பொருத்தம்தான். ஆத்தாவுக்கு பரம்பரை பரம்பரையாக தெரிந்த இறைச்சி விற்கும் தொழில் என்று வரும்போது அங்கு இரக்கம் என்பது அனாவசியம் என்பதை இறைச்சியின் வெவ்வேறு வகையான உறுப்புக்களை ஒரு ஆட்டுக்கறி விற்கும் ஒரு கடைகாரனின் லாவகத்தோடு ஆசிரியர் விவரிப்பதில் புரிகின்றது. வாங்குபவர்கள் பை கொண்டு வரவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் மூலம் நெகிழிப்பை உபயோகம் கூடாது என்கிற விழிப்புணர்வு மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆடு தான் தெரியாமல் இறந்த பின்பு மனிதர்க்கு உணவாகப் பயன் படும். மனிதனும் இறந்தபின் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்துக்கு பயன் பட வேண்டும் என்பதை உறுப்புக்கள் தானம் செய்ய எழுதி வைத்த காமாட்சி ஆத்தா மூலம் வலியுறுத்த முயல்கிறார் ஆசிரியர். அதுதான் திரு பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளுக்குள்ள தனித்துவம்.
அபி அவர்களின் சிறுகதைகளுக்கே உரிய கதைகளம், கதாபாத்திரங்களின் உயிருள்ள வடிவமைப்பு, நிகழ்வுகள், கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற வண்ணம் உள்ள வட்டார வழக்கு உரையாடல்கள், முடிவில் மறக்காமல் பகிரப் படும் சமூக சிந்தனையும் விழிப்புணர்வும் இந்த கதையிலும் உண்டு.
இந்தக் கதையின் நிறைவு வரிகள் : "
புரியாதவர்களுக்கு புதிராய் இருந்த ஆத்தா,புரிந்தவர்களுக்கு புனிதமாகியிருந்தாள். எப்போதும் அவள் அப்படித்தான்..!
வாசிப்பவர் நெஞ்சில் ஆணி அடித்ததுபோல் நிற்கும் வரிகள்...
வாழ்த்துக்கள் திரு அபி அவர்களே...
=====================================================================================
இந்த திறனாய்வு கட்டுரை எனது படைப்பே என உறுதியளிக்கிறேன்.
-ஜி ராஜன்