மலைநாடன் தன்கேண்மை சொல்ல சொரியும் வளை - கைந்நிலை 7

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை
யெல்லுறு போழ்தி னினிய பழங்கவுட்கொண்
டொல்லென வோடு மலைநாடன் றன்கேண்மை
சொல்லச் சொரியும் வளை. 7

பொருள் எளிதாக விளங்க சொற்கள் பிரித்து தரப்பட்டுள்ளன.

கல்வரை ஏறி கடுவன் கனிவாழை
எல்உறு போழ்தின் இனிய பழம்கவுள்கொண்(டு),
ஒல்லென ஓடும் மலைநாடன் தன்கேண்மை
சொல்ல சொரியும், வளை. 7

பதவுரை:

கடுவன் - ஆண்குரங்குகள்,

கல்வரை ஏறி - கற்களியுடைய மலைகளின் மேல் ஏறிச் சென்று,

எல்,உறு போழ்தின் - பகல் நேரமதில்,

கனிவாழை இனிய பழம் - (அங்குள்ள) வாழைமரங்களில் கனிந்தனவாக இருக்கும் இனிய பழங்களைப் (பிடுங்கி உரித்து)

கவுள்கொண்டு - கன்னங்களினுள் ஒதுக்கினவாக, ஒல்லென ஓடும் - விரைவாக ஓடும்.

மலைனாடன் தன் கேண்மை - (அத்தகைய வளம்கொண்ட)மலை நாட்டுக்கதிபதியாகிய தலைவனது நட்பினைப் பற்றி

சொல்ல - பேசத் தொடங்கினால்,

சொரியும் வளை - என் வளையல்கள் கழன்று விழுகின்ற நிலைமை ஏற்பட்டு என் உடல் மெலிகின்றது;

பொருளுரை:

ஆண்குரங்குகள் கற்களியுடைய மலைகளின் மேல் ஏறிச் சென்று பகல் நேரமதில் அங்குள்ள வாழை மரங்களில் கனிந்தனவாக இருக்கும் இனிய பழங்களைப் பிடுங்கி உரித்து, கன்னங்களினுள் ஒதுக்கினவாக விரைவாக ஓடும். அத்தகைய வளம்கொண்ட மலை நாட்டுக்கு அதிபதியாகிய தலைவனது நட்பினைப் பற்றிப் பேசத் தொடங்கினால் என் வளையல்கள் கழன்று விழுகின்ற நிலைமை ஏற்பட்டு என் உடல் மெலிகின்றது.

குறிப்பாக, கனி வாழை கவர்ந்தோடும் கடுவனைப் போல், புணர்ந்தோடி மறையும் தலைவனது இயல்பினைப் பேசப் பேசப் பயம் மிகுதியாகி, உடல் மெலிந்து வளையல்கள் நெகிழ்ந்து சொரிகின்றன என்று தலைவியின் நிலையைக் இப்பாடலின் கவிஞர் உணர்த்துகிறார்.

விளக்கம்:

ஆண் குரங்குகள் வாழைக் கனிகளைப் பகற்காலத்திற் பறித்து உரித்துக் கன்னத்தில் ஒதுக்கி விரைந்தோடும் மலைவளமுடைய தலைவன் ஆதலால் அவன் செயலும் அது போலவே இருக்கின்றது என்று குறிப்பாகக் கூறினாள்.

தினைப் புனத்திலேறி அங்கிருந்த என்னைக் களவிற் புணர்ந்து இன்பம் துய்த்து விரைவில் நீங்கினான் என்பது குறிப்பு. அவ்வாறு பிரிந்த தலைவனியல்பை நான் சொல்லக் கருதியபோதே என் வளையல்கள் கழல்கின்றன என்பது உடல் மெலிகின்றது என்பதை உணர்த்துகிறது.

சொல் என்பதற்கு நீ கூற என்று பொருள் கொண்டு தோழி இயற்பட மொழிந்தனள் என்றும் அது குறித்துத் தலைவி இயற் பழித்துரைத்தனள் என்றும் பொருள் கூறலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-15, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே