மலை நாடன் பேணி வரினே சுருங்கு மிவளுற்ற நோய் - கைந்நிலை 8

கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

கைந்நிலை பாடல் 8 ன், 2 வது அடியில் சில சொற்கள் தெளிவாக உறுதியாகக் கொடுக்கப்படவில்லை.
பாடல் கீழேயுள்ளவாறு தரப்பட்டுள்ளது.

கருங் கைக் கத வேழம் கார்ப் பாம்புக் குப்பங்
கி... க் கொண்...........................கரும்
பெருங் கல் மலை நாடன் பேணி வரினே,
சுருங்கும், இவள் உற்ற நோய். 8

2 ஆம் அடி (கிருங்கைக்கொண் டோச்சியிறா லின்றே னுகரும்) என்று
கொண்டு பொருள் எழுதப்பட்டது. (இறால் இன்தேன் நுகரும்) என்று
TVU வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கைக் கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங்
கிருங்கைக்கொண் டோச்சியிறா லின்றே னுகரும்
பெருங் கல் மலை நாடன் பேணி வரினே,
சுருங்கும், இவள் உற்ற நோய். 8

கீழேயுள்ள சொற்பொருளில் தரப்பட்டுள்ள குறிப்பை அடிப்படையாய் வைத்து 2 ஆம் அடியில்
சொற்களைச் சேர்த்து பாடலைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.

கருங்கைக் கதவேழங் கார்ப்பாம்புக் குப்பங்
கிருந்துபெருங் கைக்கொண்டு தேனை நுகரும்
பெருங்கன் மலை நாடன் பேணி வரினே
சுருங்கு மிவளுற்ற நோய். 8

மாற்றுக் கருத்துகள் இருப்பின் நண்பர் காளியப்பன் எசேக்கியல்
மற்றும் நண்பர்கள் கருத்தாகப் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சொற்பொருள்:

கருங்கை கதம் வேழம். வலிய கைகளையுடைய சினம் பொருந்திய யானைகள்; கார் பாம்புக்கு பங்கு - கரிய மலைப் பாம்புகளின் பக்கத்தில்; இ.......க் கொண்............... கரும் - பெரியகைகளால் தேனீக்களை யோட்டித் தேன் கூட்டினை யெடுத்து அதன் கண்ணுள்ள இனிய தேனையுண்ணும்; பெருங்கல் மலைநாடன் பேணி வரின் - பெரிய கற்களையுடைய மலை நாடனாகிய தலைவன் இவளை விரும்பி நாடோறும் வந்தால்; இவள் உற்ற நோய் சுருங்கும் - இவள் கொண்ட காமநோயானது தணியும், (என்று தோழி செவிலியிடம் கூறினாள்.

இறால்: Honeycomb - தேன்கூடு. தேனிறால் (நள. கலிநீங். 14).

விளக்கம்:

தலைவி வேறுபாட்டிற்குக் காரணம் ஒரு தலைவனைக் காதலித்து அவன் வாராமை குறித்து உடல் மெலிந்து வருந்துகின்றாள். அத்தலைவன் நாள்தோறும் வந்து இவளுடன் கலந்தால் இவள் நோய் நீங்கும், அவனை நினைந்து உடல் மெலிகின்றாள் என்று குறிப்பால் உரைத்தாள்.

இவ்வாறு உரைக்கவே செவிலி பாங்கியை, 'காதலன் யார்? அவனைக் காதலித்ததற்குக் காரணம் யாது? அவன் எவ்வாறு இவளுக்குக் காதலனானான்? என்று தொடுத்து வினவுகிறாள். வினாக்கட்குத் தகுதியாக பூத்தருபுணர்ச்சி, புனறருபுணர்ச்சி, களிறுதருபுணர்ச்சி என்ற மூன்றிலொன்றைப் படைத்து மொழிந்து அறத்தொடு நிற்பாள். அவனுக்கே மணமுடிப்பது அறமாகும் என்றும் வற்புறுத்துவாள். இதுவே அறத்தொடு நிலையாகும். வரைதல் பயன்.

யானை கரும்பாம்புகளின் பக்கத்தில் துணிவாக நின்று தேன் கூட்டினையழித்துத் தேனுகர்ந்தது போல நம் குறவர்குடி வேடர்கட்கு அஞ்சாது இரவில் வந்து இவளைக் கூடிக்கலந்து இன்பம் நுகர்ந்து செல்கின்றான் எனக் களவொழுக்கம் உள்ளுறையுவமை வழித் தோன்றுவதும் காண்வேண்டும்.

தொல். கள. சூத். 24. முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப்புகுப்பினும் என்பதன் பாற்படும்.

(இ-பு.) கருமை + கை - கருங்கை, இருமை + கை - இருங்கை; பண்புத்தொகைகள். பெருமை + கல் - பெருங்கல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-15, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 132

சிறந்த கட்டுரைகள்

மேலே