காக்கா முட்டை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா இரவி இயக்கம் மணிகண்டன்

காக்கா முட்டை ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ; மணிகண்டன் !
இசை; ஜி .வி .பிரகாஷ் குமார் !
சரியான படத்திற்கு சரியான தேசிய விருது வழங்கிய தேர்வுக் குழுவிற்கு நன்றி .இயக்குனர் மணிகண்டன் அவர்கள் படத்தை சிற்பி சிலை செதுக்குவது போல செதுக்கி வெற்றி பெற்றுள்ளார் .மக்களை முட்டாளாக்கும் பேய்ப்படமும் மசலாப்படமும் எடுக்கும் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம்.
இந்தப்படத்தில் குத்துப்பாட்டு இல்லை . வெட்டுக் குத்து இல்லை சண்டைக்காட்சி இல்லை ,கவர்ச்சி நடிகை நடனம் இல்லை .நடிகையின் சதையை நம்பாமல் நல்ல கதையை நம்பி படம் எடுத்துள்ளனர் .பாராட்டுக்கள் .நம்பமுடியாத கதாநாயகன் துதி இல்லாத நல்ல படம்
படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து படத்தோடு ஒன்றி விடுகிறோம் .இயக்குனரின் வெற்றி .சென்னையில் சேரியில் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டி உள்ளார் .
.
கணவன் குற்றம் செய்து விட்டு சிறையில் இருக்கிறான் .மாமியா இரண்டு மகன்களை வளர்க்கும் தாயாக நடிகை ஐஸ்வர்யா சிறப்பாக நடித்து உள்ளார் .அல்ல பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.இரண்டு சிறுவர்களை மையமாக வைத்து கதை நகர்கின்றது.
கணவன் சிறையில் இருப்பதால் மனைவி வேலைக்கு சென்று மகன்கள் இருவரையும் வயதான மாமியாவையும் வளர்த்து வருகிறாள் .கோழி முட்டை சாப்பிட வழி இல்லை .சிறுவர்கள் அம்மா போடும் சோறில் கொஞ்சம் சட்டை பையில் வைத்து எடுத்துச் சென்று காக்காக்கு வைத்து காகா என்று கத்த காக்கா மரத்தில் இருந்து வந்ததும் மரத்தில் ஏறி காக்கா முட்டையைப் பார்க்கிறான். மூன்று உள்ளன .மூன்றையும் எடுக்காமல் தனக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று போதும் .ஒன்று காக்கைக்கு இருக்கட்டும் என்று வைத்து விடுகிறான் எடுத்து வந்து காக்கா முட்டையை இருவரும் குடிக்கின்றனர் .அதில் இருந்து அவர்கள் பெயர் பெரிய காக்கா முட்டை ,சின்ன காக்கா முட்டை என்று ஆகின்றது .காக்கா இருக்கும் மரம் ,சிறுவர்கள் விளையாடும் இடம் . ஒருவர் விலைக்கு வாங்கியதும் . காக்காக்கள் வாழும் மரத்தை அறுக்கும்போது சிறுவர்கள் கலங்கி விடுகின்றனர் . காக்காக்கள் எங்கு வாழும் என்று வருந்துகின்றனர் .நெகிழ்ச்சியான காட்சி.
தம்பிக்கு இரவு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது .அதை கேலி செய்யும் போது மனம் வருதுகின்றான்
சிறுவர்கள் தொலைக்காட்சிப் பார்த்து நடிகரின் சிம்புவின் ரசிகர்கள் ஆகிறார்கள் .சிம்பு வந்து திறந்து வைக்கும் பீசா கடையை வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்து . பீசா சாப்பிட வேண்டும் என்று ஆசை பிறக்கின்றது .ஏழைச் சிறுவர்கள் அம்மாவிடம் கேட்டுப் பார்க்கிறார்கள் .
அம்மாவோ சிறையில் உள்ள கணவனை வெளியில் எடுக்க வழக்கறிஞருக்கு பணம் செலவு செய்து துன்பத்தில் வாழ்கிறாள். அம்மா பீசா விலை ரூபாய் 300 என்றவுடன் வாங்கித் தர மறுக்கிறாள் அவர்களாகவே பணம் சேர்த்து பீசா வங்கிச் சாப்பிட முடிவு செய்கின்றனர்.தொடர்வண்டிப் பாதையில் சிந்திக் கிடக்கும் கரிகளை எடுத்து வந்து கடையில் போட்டு பணம் வாங்கி சேர்க்கின்றனர்.
ஆயா பேரன்களின் பீசா ஆசை போக்க தோசை சுட்டு அதை பீசா போலவே அலங்கரித்து தருகிறாள் .பேரன்கள் தின்று விட்டு பீசா போல நூல் வரவில்ல்லை என்கின்றனர் .கெட்டுப் போனால்தான் நூல் வரும் என்கிறாள் ..
நல்ல சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு பீசா கடைக்கு செல்வோம் என்று முடிவு செய்து .நல்ல சட்டை வாங்க கடைக்கு சென்று பார்க்கின்றனர் .அதுவும் பெரிய கடை அதிலும் உள்ளே விட மாட்டார்கள் என்று கருதி .சட்டை எடுத்து விட்டு நிற்கும் பணக்கார சிறுவனுக்கு பானி பூரி வாங்கிக் கொடுத்து,பணமும் கொடுத்து சட்டை வாங்கிக் கொண்டு வந்து .போட்டுக் கொண்டு மறுபடியும் பீசா கடைக்கு செல்கின்றனர் .
அப்போதும் காவலாளி உள்ளே விட மறுக்க இந்த சண்டையை வெளிய வந்து பாரத்த பணியாளர் சிறுவனைஓங்கி அடிக்க ,அதை சேரி சிறுவர்கள் திருடிய அலைபேசியில் படம் பிடிக்க .அந்தப்படமே பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ,ஊடங்களில் ஒளிபரப்பாக, விவாதிக்கப் படுகிறது. பிரச்சனை பெரிதாகின்றது என்பதை உணர்ந்த பீசா கடை முதலாளி காவல் அதிகாரி மூலம் சிறுவர்களை வரவழைத்து ஊடகங்களையும் வரவழைத்து வரவேற்று பீசா தருகிறார் .சிறுவர்கள் பீசாவை தின்றுப் பார்த்து விட்டு ஆயாவின் தோசை நன்றாக இருந்ததே .பீசா நன்றாக இல்லையே என்கின்றனர் .படம் முடிகின்றது .இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நல்ல முடிவு.
சிறுவர்களின் ஆயாவாக வரும் பாட்டி மிக நன்றாக நடித்து உள்ளார் ஆயா இறந்து விட்ட காட்சியின் போது படம் பார்க்கும் அனைவரின் கண்ணும் கலங்கி விடுகிறது .சிறுவர்கள் பீசாவிற்காக சேர்த்து வைத்து இருந்த பணத்தை ஆயாவின் இறுதிச் சடங்கிற்கு தருகின்றனர் .
.
இயக்குனர் மணிகண்டன் போகிறபோக்கில் படத்தில் பல செய்திகள் சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .வசனம்ஆனந்த் அண்ணாமலை எழுதி உள்ளார் .நன்று .பாடல்கள் இசை பின்னணி இசை யாவும் நன்று .பாடல்கள் .முத்துகுமார் .ராஜ்குமார் எழுதி உள்ளனர் .பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றன .
கருப்பு என்று யாரையும் ஒதுக்காதீர்கள் .
உலகில் பிறந்த யாவரும் சமம் .ஏழை பணக்காரன் பாகுபாடு ஒழிய வேண்டும் .
தொலைக்காட்சி வரும் முன் ஏழைகள் நிம்மதியாக வாழ்ந்தனர் .
தொலைக்காட்சி வரும் விளம்பரங்கள் நுகர்வு கலாசாரத்தை பரப்பி ஏழை சிறுவர்களின் மனதில் துன்பம் .
உலகமயம் ஏழைகளை வாட்டி வதைக்கிறது .பணக்காரச் சிறுவர்களைப் பார்த்து ஏழைச் சிறுவர்கள் மனம் ரணமாகிறது .
சேரி வாழ்வில் இன்னும் விடியவில்லை .
படம் முடிந்து விட்டுக்கு வந்தபின்னும் படம் பற்றிய நினைவுகள் மனதை வருடுகின்றன .இதுதான் இயக்குனர் மணிகண்டன் வெற்றி . வறுமை வாழ்க்கையைப் பற்றி படம் தயாரித்து தனுஷும் வெற்றிமாறனும் பணக்காரன் ஆகி விட்டனர் .
படம் முடிந்ததும் நான் உள்பட பலரும் எழுந்தி நின்று கரஒலி தந்தோம் .படத்தில் துளி கூட ஆபாசம் இல்லை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய நல்ல படம் .
முடிவாக நூடுல்ஷ் தடை செய்தது போல பீசாவும் தடை செய்தால் நன்று என்று தோன்றியது .