பொருதவரும் சேவ லெனப்பிடவ மேறி - கைந்நிலை 26

கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

3. முல்லை

தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது

குருதி மலர்த்தோன்றி கூர்முகை யீன
... ... ... சேவ லெனப்பிடவ மேறி
பொருதீ யெனவெருளும் பொன்னேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல். 26

இப்பாடலின் இரண்டாம் அடியின் முதற்சீர் தரப்படாமல் குறைவுடன் இருக்கிறது.
பொருளுரையில் உள்ள விளக்கத்தின் அடிப்படையில் பொருதவரும் என்ற காய்ச்சீரைச் சேர்த்திருக்கிறேன். கருத்துரைக்கும்படி தள நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

குருதி மலர்த்தோன்றி கூர்முகை யீன
பொருதவரும் சேவ லெனப்பிடவ மேறி
பொருதீ யெனவெருளும் பொன்னேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல். 26

பொருளுரை:

பொன்னுக்கு நிகரான அழகுடைய தலைவியே! செங்காந்தள் செடிகளின் கூர்மையான அரும்புகள் குருதி போன்ற நிறமுடைய பூக்களைக் காட்ட, அப்பூக்களின் தோற்றத்தைக் கண்டு தன்னோடு போர் செய்யவரும் வேறொரு சேவலென்று கருதி பிடவஞ்செடியின் மேலேறி நின்று உற்று நோக்கி சுடுகின்ற நெருப்பு என்று எண்ணி அஞ்சியோடுகின்றது. கார்காலம் தொடங்கி விட்டது. அதனால், நம் தலைவர் வராமலிருப்பது அருமையானது, வந்து விடுவார் என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.

விளக்கம்:

தோன்றிமலர் குருதிபோலச் சிவப்பானது. அரும்புகள் மலர்ந்து நெருங்கிய தோற்றம் ஒரு சேவலின் கண்ணுக்குத் தன்னோடு பொருத வருகின்ற மற்றொரு சேவல் போலத் தோன்றியது. பிடவஞ்செடியில் ஏறிப் போர் புரியத் தொடங்கிய போது நெருப்புப் போலத் தோன்றியது. அஞ்சியோடிற்று அச்சேவல். இவ்வாறு சேவல் கண்டு தீ என்று வெருளும்படி செங்காந்தள் குலை குலையாகப் பூத்து நிற்கின்றன. ஆதலால் கார் காலம் வந்தது; தலைவரும் வருவார்; நீ வருந்தாதே என தோழி ஆறுதல் கூறுகிறாள்.

வாரா விடல் - வாராதிருத்தல் என்ற பொருளைத் தந்தது. அரிது என்பது இல்லை என்ற பொருளில் வந்தது. வாராமல் இருப்பதில்லை எனவே வருவர் என்பது குறிப்பாயிற்று.

ஒரு சேவலைக் கண்டால் உடனே அதனோடு போர் புரியத் தொடங்குவது.கோழிச் சேவலின் இயற்கை ஆகும். காந்தள் செடி மேலுள்ள பூக்களின் தோற்றம், சேவலின் உச்சியிற்கொண்டைப் பூவைப்போலத் தோன்றியவுடன் மாறுபட்ட சேவல் என எண்ணி அடுத்துள்ள பிடவில் ஏறிப் போர் செய்ய எண்ணி நோக்கியபோது தீயாகத் தோன்றியது; உடனே வெருண்டோடியது என்று விளக்கங் கொள்ள வேண்டும்.

பொன் - திருமகள் போன்ற; ஏர் நிறத்தாய் - அழகிய வடிவமுள்ளாய் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-15, 8:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 122

மேலே