எரிதழல் வீழின் -2 கார்த்திகா

விதைத்தவன் மறந்தாலும்
முளைக்க மறப்பதில்லை
"விதைகள்!"

எழுதியவர் விருட்சங்களில் ஒன்றாய் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.....

சிறு செடி விதை உடைத்து பிறக்கிறது....மெல்ல தலை தூக்கும் போது மிதித்திடும் கால்களும் பிடுங்கி வீசும் சிறு காற்றும் இலை பறிக்கிறது, புயலின் அறிகுறிகளாய்..

வீசிய காற்றில் கலைந்திடா மேகங்களின் அமுது ஊட்டலில் வேர் பற்றிக் கொள்ளும் அச்சிறுமரம் அஞ்சுவதில்லை....பச்சை சாமரங்கள் வீசி கதிரவனுக்கும் ஹலோ சொல்லுகிறது...

கத்திகளும் கோடரிகளும் முனை மழுங்கிய வசந்தங்களின் நிறைவில் இலையுதிர்க்கும் நேரம்!

பிரிதலின் உண்மையாய் இலைகளும் சருகுகளாய் மாறி உரமானதும் விழுதுகள் கொடுத்த விருட்சங்களின் பலன் ஆழப்படுத்தப் படுகிறது....

மரங்களின் இலைகள் மரணிப்பதுமில்லை!மறக்கப்படுவதுமில்லை!!


பெண்ணானவள் துயரங்கள் சுமக்க பிறந்தால் என்றால் உலகின் அத்தனை அமைதிகளின் அடியிலும் எரிகுழம்பு ஊற்றெடுக்கும்..

உடையளவிலும் உதட்டளவிலும் நாகரீகம் வந்த போதிலும் பெண்மையின் மேல் நம்பிக்கை கொள்ளாதோர் இன்னும் ஆதிவாசிகளே....

"உன்னால் முடியும் என்று
உனக்கே நம்பிக்கை
இல்லையெனும்போது
வேறு எது
உன்னை நம்பிக்கைக்கு
உரியதாய் மாற்றிக்கொள்ளப் போகிறது?"

படிப்பதும் வேலைக்குச் செல்வதும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதும் நம் கனவுகளை நிறைவேற்றும் அளவிற்கு வல்லமை கொண்டவை அன்று....

அடிப்படை கடமைகளுடன் லட்சியத் தீட்டல்களும் மனதில் தீற்றப்படுதல் வேண்டும்..

விழுந்தாலும் மரத்தில் துளிர்த்தாலும் மண்ணோடு உரமாய் மரித்திடும் இலைகளின் வேதம் பெண்ணிற்கு பொருத்தமென்று சொல்லுதல் மிகை ஆகா.....


"மரணம் தழுவதற்குள்
எம் பயணம்
தீர்மானிக்கப் படட்டும்
வெற்றிப் புரவியின் மேல்!
குளம்பொலி சத்தத்தில்
சாத்திரப் பேய்கள்
சிதறுண்டு ஓடுமாம்!

கனவுகள் கோர்த்து
வானின் எல்லைகள் தீர்மானித்தலில்
தரை மேல் நிலாக்கள் எரியும்!
கால்கள் புதைந்திட்ட
சிறகுகள் முளைத்திடா
கை கட்டி வாய் அற்ற
முதுகெலும்பு உடைந்த
நீதி சமைக்கப்பட வேண்டும்
தொட்டால் சுடும்
எரி தணலென!!"


ஏதோ பிறந்தோம் ......வாழ்ந்தோம்....நமக்காக இல்லையென்றாலும் ஊருக்காக ..
இதற்காகவா நாம் லட்சக்கணக்கான அணுக்களுடன் சண்டையிட்டு சூல் கொண்டோம்?தாயவள்
உதிரம் சொட்ட சொட்ட ரத்தமும் சதையுமாய் அவள் உயிரை உருவி தொப்புள் கொடி பூண்டது எதற்காக??

வந்தவர்களும் போகிறவர்களும் தொட்டுக் கொள்வதற்கு ஊறு பண்டம் நீ இல்லையே.....
மற்றவர் உன்னை மாற்றிக் கொண்டு விருப்பம்போல் பொம்மை செய்வதற்காகவா நீ வாழ்கிறாய் ..


"வாழ்வதற்கே வழி இல்லை எனும்போது
சாவதற்கு துணிவு எங்கிருந்து
வந்துவிடப் போகிறது?"


பெண்ணே !!
நீ, நீ மட்டும்தான்..
உன் விருப்புகளும்
வெறுப்புகளும் உனக்கு மட்டுமே..
பிறர் மன எண்ணங்கள் உன்
எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை ..

மற்றவர்க்காக நீ மாறினால்
ஒருநாள் நீயே தொலைந்து போவாய் !
உனக்கான கதவுகள் திறக்கப்படும்போது!!

இதை எனக்காய் எழுதவில்லை நமக்காகவே....


எங்கேயோ கேட்ட மனதின் ஆர்ப்பரிப்பு இது .....

"ஆற்றில் வெள்ளம் வரும்போது
அதில் மிதந்து வரும்
எறும்புகளை மீன்கள்
உணவாகக் கொள்ளுமாம் ..
ஒரு நாள் வெள்ளம் வடியும் !
காலமும் மாறும்...அப்போது
காய்ந்து கிடக்கும் மீன்களை
எறும்புகள் உண்ணுமாம்!!"


-மீண்டும் எரியும்

எழுதியவர் : கார்த்திகா AK (6-Jun-15, 4:06 pm)
பார்வை : 548

சிறந்த கட்டுரைகள்

மேலே