பொள்ளாச்சிஅபி-திறனாய்வுக்கட்டுரை
பொள்ளாச்சிஅபி- சிறுகதைத் திறனாய்வுப் போட்டி
சிறுகதைகள் முழுவதும் சமூக விழிப்புணர்வு கருதியே படைக்கப்பட்டுள்ளது.
இச்சிறுகதை எழுதிய ஆசிரியர் பொள்ளாச்சியோ அல்லது அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிப்பவராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இணையத்தளத்தில் பொள்ளாச்சிஅபி என்பவர் ஆண் என்பதைத்தவிர வேறெங்கும் குறிப்புகள் காணப்படவில்லை.
களஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கலாம்.
திறனாய்வு என்பது ஆசிரியரின் கருத்தாக்கம் நிகழ்வதற்குக் காரணமான இடம்,காலம்,கருதப்படுகின்ற பொருள் மட்டுமல்லாது அவர் வாழ்ந்து வருகின்ற குடும்பம்,சமூகம் இவற்றை உள்ளடக்கியதாகும்.
ஆனால்,ஆசிரியர் வரலாறு மின்னஞ்சல் அளிக்கப்பட்டு கேட்கப்பட்டிருந்தாலும் பதில் அனுப்பப்படாமையால் போட்டிக்கு உட்படுத்தப்பட்ட பத்து சிறுகதைகளை மட்டும் ஆராய்ந்து இவ்வாய்வுக் கட்டுரை படைக்கப் பெறுகின்றன.கதையின் சிறப்புகளின் அடிப்படையில் சிறுகதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
1. இன்னுமொரு கண்ணி
கதையின் இயல்பான போக்கு ஆங்கிலம் கலந்த வடமொழி கலந்த வட்டார மொழிநடையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் மொழிநடையைச் சார்ந்த இத்திறனாய்வுக் கட்டுரை இயல்பான நடைமுறை மொழி நடையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கதை கூறும் களத்தின் ஒரு கூறு இரவு தெருவோரம் என்பதையும்,வருங்காலச் சமுதாயம் இளைஞர்கள் கையில் இருப்பதையும் கருத்தில்கொண்டு ஏன்ஏஜ் மாணவனைக் கதைத் தலைவனாக்கி கதை பின்னப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் கதை எழுதும் அறிவார்ந்த திறனை வெளிக்காட்டுகிறது.
பள்ளியில் பாலியல் கல்வி சட்டரீதியாக போதிக்கப்படாமல் இருப்பதால் நிகழும் விளைவுகளையும், ஏன்ஏஜ் மாணவர்கள் திருந்தவும் இக்கதை வழிகாட்டியாக அமையும்.
ஆணாதிக்கச் சமுதாயத்தின் சிற்றின்ப ஆசையினால் விளையும் உயிர்க்கொல்லிநோயை நுண்ணிய அணுகுமுறையின்வழி கையாண்டுள்ளவிதம் சிறப்பானது.
பொதுவாக டீன் ஏஜ் மாணவனுக்கும்,தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளி அதிகம் காணப்படும் இன்றைய சமுதாயத்தில் ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்‘ என்ற சிந்தனையோடு இக்கதை அமைத்திருப்பது ஆசிரியரின் குடும்ப மனப்போக்கினைக் காட்டுகிறது.
‘கற்க கசடற‘ எனும் வள்ளுவத்தின்படி பெற்ற கல்வியைப் பிறருக்கும் அளித்து வாழும் கணேசன் கதாபாத்திரம் உயர்வானது.இது ஆசிரியரின் உயர்ந்த கருத்துச்சிந்தனையை வெளிக்காட்டியுள்ளது. சமுதாயத்தில் ஆசிரியர்,மருத்துவர்,காவலர்,வழக்கறிஞர்போன்ற இந்நான்கு துறையிலும் இருப்போர் தங்கள் பணியறிந்து செயலாற்றினால் நாடு திருந்தும் என்பதைக் குறிப்பால் ஆசிரியர் உணர்த்தியுள்ளதைக் காண இயலுகிறது.
சமுதாயத்தில் காணப்படும் பாலியல் தீமைகளின் அவலத்தைச் சாடியுள்ளபோக்கு ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்து திருந்தி வாழும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுள்ளது.
எயிட்ஸ் இல்லாப் புது உலகம் படைக்க ஒருவனுக்கு ஒருத்தி என்ற முடிவுடன் கதை அமைத்துக் காட்ட ஆசிரியர் விழையாமல் பாலியல் விழிப்புணர்வுக்குமட்டும் முக்கியத்துவம் அளித்துவம் அளித்திருப்பது சமுதாய நடைமுறைப்போக்கினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. உலகெங்கும் பெண் குறித்த பாலியல் கருத்துகள் ஆண் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதைக் காண இயலுகிறது. இதனை ஆணாதிக்க மனப்போக்கு எனவும் கருத்தில் கொள்ளலாம்.
தனது தேவைக்காகவும்,தனது குடும்பத்தேவைக்காகவும்,எதிர்பாராதவிதமாகவும் பாலியல் தொழிலை மேற்கொண்டுவாழும் பெண்கள் குறித்தும் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் இத்தொழில் குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் இன்னமும் அழுத்தமாகப் பதிந்திருக்கும். விபசாரத் தொழில் இன்னமும் இந்தியாவில் முறையாக அங்கீகாரம் இல்லாத தொழில். ஆனால், இன்னமும் இத்தொழில் நடந்தேறி வருவதால்
சமுதாயத்தில் தமிழ்ப்பண்பாடு சிதைவுபட்டநிலையினைக் காண இயலுகிறது.
மாற்ற இயலாதது மானிட உலகில் ஏதுமில்லை என்பதை ‘இன்னுமொரு கண்ணி‘ சிறுகதை வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் சிறுகதைத் திறனாய்வு-தொடரும்.