சொல் அணியில் மடக்கு - எழுதியவர் Dr V K Kanniappan
சொல் அணி ஆறு வகைப்படும். அவையாவன: எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, அந்தாதி
மடக்கு என்பது ஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.
உதாரணம் 1
அரவம் அரவம் அறியுமா?
பொருள்:
பாம்பு சத்தம் அறியுமா?
ஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.
உதாரணம் 2.
கோவ ளர்ப்பன கோநக ரங்களே
கோவ ளர்ப்பன கோநக ரங்களே
மேவ ளர்க்கர் வியன்திரை வேலைசூழ்
கோவ ளர்ப்பன கோநக ரங்களே.
இப்பாடலில், “கோவளர்ப்பன கோ நகரங்களே” என்னும் தொடர் மூன்று அடிகளில் வந்துள்ளன.
“கோ வளர்ப்பன கோ நகரங்களே” என்னும் அடி, மடங்கி மடங்கி வந்து, வேறு வேறு பொருள் தருகின்றன.
அவை:
(சோழ மன்னனின்) ஒளி (புகழ்) யை மிகுவிப்பன தலைமையுடைய நகரங்களாகும்.
கோவாகிய சோழன், பெருக்கிக் கொள்வன, பகை அரசர்களின் திறைப் பொருள்களையே யாகும்.
திரையாகிய கரையால் சூழப் பெற்ற இந்நிலவுலகத்தைக் காப்பன சோழ மன்னனின் கைகளேயாகும்.
[கோ - அரசன் ; கோ - ஒளி ; கோந-கரம் - அரசனின் கரங்கள் (கைகள்)]
இவ்வாறு, ஒரு செய்யுளில் ஒரு முறை வந்த சொற்களோ, சொற்றொடர்களோ, அடியோ மடங்கி (மீண்டும் வந்து) வந்து பொருள் தருவது மடக்கு அணி ஆகும்.
உதாரணம் 3
பாவை தருகின்ற பார்வைக்(கு) இனிக்கின்ற
பா..வைப் படைக்கின்ற பாவலன்யான்! - கோவைக்
கனியழகே! கொஞ்சும் குரலழகே! உன்னால்
இனியழகே யாவும் எனக்கு! 1
குருத்துச் சிரிப்பழகே! கோலவிழிப் பெண்ணே!
பெருத்துச் செழிக்கின்ற பேறே! - திரண்ட
மலைத்தேன் மொழியே! மலைத்தேன் உன்றன்
கலைத்தேன் கவிகளைக் கண்டு! 2 - கவிஞர் கி.பாரதிதாசன்
(வலைத் தளத்திலிருந்து)
4. 07, ஜூன், 2015 ல் 'எழுத்து' தளத்தில் பதிவான
'வழி என்ன சிலேடை பஃறொடை வெண்பா'
மாதுளப் பூமலரு(ம்) மாமரமே சொல்நீ.பூக்
காதுளப் பூவைப்பார்க் காதிருப்பின் =தீதுளதே!
தோதுளதோ காட்டு(க்). கொடியிடைக் காம்பதன்
மீதுள தேமாங் கனித்தேன் வரவழி
ஏதுளதோ? என்றுத் தனித்தேன் இருந்தருந்தா
போதுளம் வாடித் தனித்தேன். எனதுளத்து
தூதுக்கு ஏது வழி?
ஆஹா! மெய்யன் நடராஜின் 'வழி என்ன சிலேடை பஃறொடை வெண்பா'வில்
...................................................தனித்தேன் இருந்தருந்தா என்பது தனித்து தேன் இருந்து அருந்தா என்றும்,
போதுளம் வாடித் தனித்தேன் என்பது 'வாடித் தனித்திருந்தேன்' என்று வெவ்வேறாகப் பொருள்படுமல்லவா?
இதுதானே 'சொல் மடக்கு' எனப்படும்! அருமை!
தற்சமயம் கோவையிலிருக்கிறேன், சிலநாளில் மதுரை சென்றதும் விரிவாக எழுதுகிறேன்.
==============================================================
பின் குறிப்பு: இது Dr. வ.க .கன்னியப்பன் அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/247466-ல் கருத்திடவும். (இங்கு கருத்திட இயலாது)