டும் டும் டும்

சிதறிய தீக்குச்சிகளாய் களைந்த காலணிகள் அவள் வாசலில்
சிரிப்பு சப்தமுடன் இதுவரை கண்டிராதவர்கள் முன் அறையில்

வலை வீசி மணமகளின் தோழிகளைத் தேடும் இவனது தோழர்கள்
வந்தவர்களை கண்டிராதது போல் இமை திருப்பாத இவளது தோழிகள்

சம்பந்தம் பேசி சம்பந்தியாக இருக்கும் இவர்களின் பெற்றோர்கள்
சங்கீதக் கச்சேரி நடப்பது போல் அங்கு சங்கமித்த உறவினர்கள்

கொளு பொம்மை போல் நடு நிற்க வைத்த அவளின் மன நடுக்கம்
கொளுத்திய ராக்கெட்டாய் அவளையே சுற்றும் இவன் விழி ஒரு பக்கம்

சம்பந்தப் பேச்சிடையே பேசத் துடிக்கும் நான்கு விழியில் சிறு வெட்கம்
சமைத்த உணவு பரிமாறும் போது குறும்புப் பேச்சுக்கள் மறு பக்கம்

விடை-பெற்று சென்றாலும் விடிய விடிய அவன் எண்ணம் இவளுள்
வீடு திரும்பியும் அவள் வீட்டு முற்றத்தையே சுற்றும் மனம் இவனுள்

கண் பேச முடியா வார்த்தைகளை இறுதியில் கைப்பேசி பேச வைத்தது
கட்டுப் போட முடியாமல் இரு இதயத்தை கடைசியில் காதல் தைத்தது

பத்திரிக்கையில் பெயர் திருத்த ஒரு நாள்
பட்டினியில் அவள் மெலிந்ததால் ஒரு நாள்

நகைக் கடையில் ஒரு முறை, துணிக் கடையில் ஒரு முறை - இப்படி
அவளைக் காண காரணக் கற்கள் அடுக்கியது காதல் கோட்டை

அவனோடு சேர இவளும் வந்தாள் விட்டு அவள் வீட்டை
திருமண மண்டபம் நிறைய, தீயென மின் விளக்கு ஒளிர

உறவுகள் ஒவ்வொன்றாய் உள் வர, உணவும் ஒரு புறம் உண்ண
இவள் தோழிகளும் , அவன் தோழர்களும் குறும்புப் பேச்சு இசைக்க

இரவு நேரம் இனிதாய் முடிந்து மங்கள இசையோடு பிறந்தது காலை
இருவரையும் கம்பளம் விரித்து வரவேற்றது கதிரவச் சோலை

இவளது காதின் பின்னே ஒலித்தது ஐயர் ஓதிய மந்திரம்
அவன் கண் முன்னே நிறைந்தது மஞ்சளிட்ட மங்கள் சூத்திரம்

நாதஷ்வரம் ஒலிக்க, நலங்கு தொட்டு, நல்ல நேரம் பார்க்க
இவள் தலை சாய்க்க, அவளைத் தொட்டு இவன் மூன்று முடிச்சிட

இறுதியில் கை கோர்த்து இல்லறம் இணைந்த இருவரின் எண்ணம்
“ இவள் எனதென்றும்.., இவன் எனக்கென்றும்....... “

அன்று கைப்பேசியில் பேசாத வார்த்தைகளை
இனி ஒன்றாய் கோர்த்த கைகள் பேசட்டும். டும் டும் டும் ....

எழுதியவர் : ராஜேஷ் (8-Jun-15, 4:02 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : dum dum dum
பார்வை : 829

மேலே