தெரியாது தெரியாது தெரியாது

ஒரு கோணத்தில் சாய்த்து
விட்டெறியப்பட்ட கல்
தவளையாய் துள்ளுவது
உள்ளிருக்கும அந்தத்
தவளைகளுக்கு தெரியாது.

தமது மூதாதையர் போட்ட
எச்சமென்று அம்மரத்தில்
கூடுகட்டிய காக்கைளுக்கு
தெரியாது.

எதையும் அனுபவிக்காமல்
எதையெல்லாம் துறந்தாய்
என்று சிலருக்காயினும்
சிலரிடமாயினும் கேட்கத் தெரியாது.

தான் மனிதன் என்று
எல்லா மனிதனுக்கும்
தான் மிருகமென்று
எல்லா மிருகத்திற்கும்
தெரியாது.

இத்தோடு தெரியாதுக்கள்
முடியாதென தெரியாதவனுக்கு
தெரியாது.

குவிந்திருக்கும் வினாக்குறிகளை
தூரநின்று பார்க்க
முற்றுப்புள்ளியாய் தெரிகிறதென
சில கண்களுக்கு தெரியாது.

வினாக்களே மீப்பெரு
கண்டுபிடிப்புகளென-சில
விடைகளுக்கு தெரியாது.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-Jun-15, 6:57 pm)
பார்வை : 170

மேலே