பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வு போட்டி இதுதான் விதியா

பொள்ளாச்சி அபி அவர்களின் இதுதான் விதியா என்ற சிறுகதையினை திறனாய்வு செய்வதற்கு முன், ஒரு சிறுகதையின் கூறுகள் பற்றி நாம் அறிந்தாக வேண்டும்.தற்பொழுதைய சிறுகதை என்பது அளவின்பாற்பட்டதாகவே பெரும்பாலும் அறியப்படுகிறது.ஆனால் சிறுகதை என்பது பல மையங்களை நோக்கி நகராமல் ஒரே மையத்தை நோக்கி நகரும் வண்ணம் அமைக்கப்படுதல் அவசியமாகிறது. அளவினை மட்டும் கொண்டு வெறும் உரை நடை பாணியில் அமைக்கப்படும் கதைகள் சுவாரசியமாக இருப்பதில்லை. மேலும் சிறுகதை என்பது வாசகர்களுக்கு ஏதோ ஒன்றை சொல்வது என்பது போல் இல்லாமல் வாசகர்களையும் கதையின் ஓட்டத்தோடு ஒட்டி அழைத்து செல்லவேண்டும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை அவர்களுக்குத் தூண்ட வேண்டும். கதையின் போக்கை உணர்த்து வண்ணமும் அதே நேரத்தில் கதையின் முடிவை அறியாத வண்ணமும் கதையின் தலைப்பு அமைய வேண்டும். இவற்றிக்கு மேலாக கதையின் முடிவில் ஒரு எதிர்பாரா திருப்பம் ஒன்றைத் தரும்போதுதான் அக்கதை முழுமை அடைகிறது.எனவே இக்கூறுகளுக்கு ஏற்ப கதாபாத்திரங்களும், கதை களமும், கதையின் முடிச்சுகளும் அமைக்கப்பட வேண்டும்.
இப்பொழுது இதுதான் விதியா என்ற கதையினை எடுத்துக் கொள்வோம்.இக்கதை வெறும் அளவின்பாற்பட்டதாக அமையாமல் கதை களம் மிக அழகாக விவரிக்கப்படுகிறது.கதையில் மரம்தான் பேசுகிறது என்பதை அறிய பாதி கதை வரத் தாண்ட வேண்டியிருப்பதும் கதையின் சுவையை கூட்டுகிறது.கதையின் போக்கில் ஆபத்து வரப் போவது மரத்திற்கா அல்லது அதன் நிழலில் உள்ள ஆட்டோக்காரர்களுக்கா என்ற ஆர்வம் வசாகர்களுக்கு ஏற்படுவது கதாசிரியரின் வெற்றிக்கு எடுத்துகாட்டாக அமைகிறது.இறுதியில் மரத்திற்கு ஏற்படும் நிலை வாசகனை வருத்தம் கொள்ள செய்கிறது. கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வாசகரை கைப் பிடித்து அழகாக அழைத்து வருகிறார் கதாசிரியர். கதையின் தலைப்பு கூட கதையின் தன்மையினை அறிவிக்கும் வண்ணமும் அதே நேரத்தில் கதையின் முடிவை ஊகிக்க இயலாவண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது. வாசகனை வெறும் கதை படிப்பவனாக மட்டுமல்லாமல் ஒரு இணை ஆசிரியனாகவே மாற்றும் பொழுதுதான் ஒரு சிறுகதை சிறப்பாக அமைகிறது. இக்கதையினை பொறுத்தவரை முடிவு இப்படி இருந்திருக்கலாமோ இல்லை அப்படி இருந்திருக்கலாமோ என படிப்பவர்களை பரீசீலனை செய்ய வைக்கிறது. எனக்கே கூட கதையின் முடிவில் மரத்தை வெட்ட வரும் பொழுது ஒருவர் ஓடிவந்து உடனே வெட்டுவதை நிறுத்துங்கள். நமது ஒப்பந்தக் காரரும் அவருக்கு உதவிய அமைச்சரும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுவிட்டார்கள்..அதனால் உடனடியாக இந்தப் பணியை நிறுத்த சொல்லி அரசாங்கம் ஆணையிட்டுள்ளது என்று கூறி மரத்தை காப்பாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. அதற்கு காரணம் கதாசிரியர் தனது சரளமான நடையில் அம்மரத்தின் மீது நமக்கு ஒரு மிகப் பெரும் அனுதாபத்தை வரச் செய்திருக்கிறார். இதுவே அவரின் வெற்றியாகும். ஒரு சிறுகதையின் கூறுகள் இலக்கணம் அத்தனையையும் தன்னுள் அடக்கி ஒரு சிறந்த சிறு கதைக்கு அடையாளமாகத் திகழ்கிறது பொள்ளாசி அபி அவர்களின் இதுதான் விதியா என்ற இச்சிறுகதை.


இக்கட்டுரை எனது சொந்த படைப்பே என உறுதி அளிக்கிறேன்.

எழுதியவர் : கொ.வை .அரங்கநாதன் (8-Jun-15, 9:53 pm)
பார்வை : 361

சிறந்த கட்டுரைகள்

மேலே