சுத்தம் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

'சுத்தம்' தலைப்பே தூய்மையானது.அதே போன்று கதையும் எவ்வித தளம்பல்களின்றி நேர்த்தியான முறையில் நகர்த்திச் செல்லப்படுகிறது.இருபத்தியோராம் நூற்றாண்டின் நிகழ்கால உண்மைகளை பிரதிபளிக்கும் வண்ணம் கதையும் எழுதப்பட்டுள்ளது.அரச தொழில் புரியும் அதிகாரிகளின் அலட்சியங்கள்,பாகுபாடுகள் என்பவற்றை கதை தெளிவாக கூறுகின்றது.சப் போஸ் மாஸ்டர் பார்த்த சாரதி
கிருஷ்ணமூர்த்தியிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தல், அவர் நீட்டிய காகிதங்களை வாங்காமல் மூக்கு கண்ணாடியை கழற்றி சுத்தம் செய்தல் என்பன தனக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை சேவையாக செய்யாமல் சுய அந்தஸ்தாக பயன்படுத்தும் இவ்வுலகிலுள்ள அதிகாரிகளின் நிலையைசுட்டிக்காட்டுகிறது.

கிருஷ்ணமூர்த்தி வருகின்ற காந்தி ஜெயந்தி அன்றைக்கு 'இந்தியாவை சுத்தமாக்குவோம் திட்டத்தின்'கீழ் எமது அலுவலகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்று சொல்லிய போது'அன்றைக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் லீவு தானே'என்று பார்த்த சாரதி வினவிய விதத்திருந்து அரச ஊழியர்கள் தன் தொழிலில் எவ்வித கடமையுணர்வும் இன்றி வேண்டாவெறுப்போடு குறித்த நேரம் தொழில் செய்வதை தான் விரும்புகின்றனர் என்பதையும் தன்னை அர்ப்பணித்து பாரத்தாய்க்கு விடுதலை பெற்றுக்கொடுத்த உத்தமர் காந்தி அவர்களின் நாமம் இன்று நல்லதை செய்ய பயன்படுத்தப்பட வில்லை என்றாலும் சிலரின் பொழுதுபோக்குக்காக நேரம் கிடைக்கத்தான் பயன்படுத்துகின்றனர் என்ற மனம் நோகும் உண்மையை படைப்பிலக்கியம் தெட்டத்தெளிவாய் சொல்கிறது.

அலுவலகத்தை சுத்தப்படுத்த வெளி நபரை அழைத்து வருதல்,அறையை பார்த்த பின் சுத்தம் செய்ய வந்தவரின் மன எண்ணம் போன்ற வருடல்கள் கதையின் தலைப்புக்கு ஏற்றால் போல் அதாவது தன் கடமைகளை செய்யக்கூட கஞ்சப்படும் சில அதிகாரிகளின் உள்ளங்கள் கதையில் வரும் ரெகார்ட் ரூம்,ஸ்டாப் ரூம்,டாய்லெட் பாத்ரூம் என்பவற்றை நீரையும்,அசிட்டையும் ஊற்றி சலவை செய்து தூய்மையாக்கப்படுவதைப் போல அவர்களது உள்ளத்தையும் சுத்தப்படுத்த வேண்டுமென்பதை 'இந்தியாவை சுத்தமாக்கும் திட்டம்'என்பவற்றின் மூலம் திருத்த முனைவதால் கதையோடு தலைப்பும் பொருந்திக் காணப்படுகிறது.

வேலைக்கு வந்த வயதான அந்நபரை பார்த்து அவரை கணக்குப்போட்டுக்கொள்ளும் மனப்பார்வை,அவர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் வண்ணம் வேலைகளை சுறுசுறுப்பாய் விரைவாக
முடித்தல்,சம்பளம் எவ்வளவு வேண்டுமென்று வினவிய போது 'உங்களை நம்பி வந்துட்டேன் நீங்களாய் பாத்து நல்ல கூலியா குடுங்கய்யா'போன்ற வருடல்கள் கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்பதை
ஒத்து ஒருவனின் ஆற்றலை மதிப்பிடுவது தோற்றமில்லை அவனின் முடியும் என்ற நம்பிக்கை தான்...,செய்யும் தொழிலை தெய்வமாய் மதித்தால் உன்னை கண்டும் உலகு ஆச்சரியப்படும் என்ற அழகிய படிப்பினையை உணர்த்துகிறது.

வேலை செய்ய வந்த நபர் காலையிலிருந்து சாயந்திரம் வரை எதுவும் உண்டீர்களா?என்று அவர்கள் அவரிடம் நலம் கேட்கவில்லை என்பதன் மூலம் மனிதாபிமானம் செத்துவிட்டது என்று முடிவுக்கு வர நினைத்த போதிலும் காய்ந்து போன பள்ளமான உள்ளத்திலும் குள்ளமானயளவு மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறது என்பதை படைப்பு உணர்த்துகிறது.புழுதி படிந்த துணியால் காந்தியின் புகைப்படத்தை சுதந்திரம் துடைக்க முற்பட்ட போது கிருஷ்ணமூர்த்தி தலையிட்டு புதிய துணியால் துடைத்தல் போன்ற வருடல்கள் அஹிம்சையாய் போராடிய காந்தியடிகள் உடல் மறைக்கக்கூட ஒரு பழைய துணியைக் கூட விரும்பாமல் தன்னுயிரை வைத்து பல உயிரை காப்பாற்ற போராடிய மகானை
பாவிகள் தவறான முறையில் கெளரவமளித்து அவமானப்படுத்துகின்றனர் என்பதை அவர்கள் அறிவிருந்தும் உணர்வதில்லை என்று படைப்பாளர் சாடுகிறார்.

இறுதியாய் மேலதிகாரிகள் வந்து இடத்தை பார்த்து பிரம்பித்து எல்லோருமாய் சேர்ந்து புகைப்படம் எடுத்து புழுதி துடைத்து மாட்டினாலும் அரச அதிகாரிகள் சிலரின் மனதில் எழுதப்பட்ட நீதி வாசகமான
ஊழல்,லஞ்சம்,என்பவற்றை துடைப்பம் கொண்டு கூட சுத்தமாக்குவது கடினம் என்பதை உணர்த்தி அதனை அவர்களே உணர்ந்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எனக்கு உணர்த்துவதால் மீண்டும் சொல்கிறேன் கதையோடு தலைப்பும் கருவும் ஆழமாய் பொருந்துகின்றது

மேற்படி திறனாய்வு என் சொந்த படைப்பாகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Jun-15, 10:19 pm)
பார்வை : 620

மேலே