வறியோன் நானும் வழிகாட்டினேன்

நீரெடுக்க வந்திட்ட இடத்தினிலே
ஏறெடுத்துப் பார்க்கும் பாவையரே !
ஊற்றெடுக்கும் ஏக்கமும் விழியிலே
பெருக்கெடுத்து வழியுது ஏன்தானோ !
மற்றவரோ பொறுப்புடன் செயலாற்ற
மங்கையரே மோனோலிசா சிரிப்புடன்
தேடிடும் பார்வையுடன் அமர்ந்திட்டு
பாடிடும் கானமும் நெஞ்சில்ஏதோ !
அலங்கரித்த அழகான முகங்களன்றோ
கலங்கடிக்கும் காளையரின் உள்ளத்தை
விலங்கிலிடும் வீரமுள்ள ஆண்களையும்
விலக்கிவிடும் வளர்த்திட்ட பெற்றவரையும் !
சலனமிலா பார்வைகளே சஞ்சலப்படுத்தும்
சரிந்திடா இதயங்களை சங்கடத்தில்விடும் !
வஞ்சமிலா நெஞ்சங்களை வரிசைப்படுத்தும்
தஞ்சமுற தகுதியுள்ளவனை தரம்பிரிக்கும் !
காதலிக்கும் கன்னியரும் காளையரும்
சாதிக்கும் எண்ணமுடன் வாழ்வினிலே
போதிக்கும் புத்தனல்லவே நானுந்தான்
விவாதித்து முடிவெடுங்கள் விரிவாக !
நம்பியுள்ள தாய்தந்தையிடம் செப்பிடுக
காதலையும் பாசத்தையும் ஒப்பிடுக !
பெற்றவர் சம்மதமுடனே மணந்திடுக
பெரியோர் வாழ்த்தையும் பெற்றிடுக !
ஆசானல்ல அடியேனும் அறிவுரைக்க
ஆழ்மனதில் பட்டதை வடித்திட்டேன் !
வருங்கால வாழ்வும் வசந்தமாகிடவே
வறியோன் நானும் வழிகாட்டினேன் !
பழனி குமார்