கற்க கசடற
புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா!
ஆங்காங்கே...
அலங்காரத்தோரணங்கள்
கல்வியின் முக்கியத்துவம்
கூறும் பதாகைகள்
“அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
பாரதி புலம்பிய பதாகை ஒருபுறம்!
“கற்க கசடற”
வள்ளுவன் வாக்கை
வழிமொழிந்தது மறுபுறம்!
தொழிலதிபர்கள்
கல்விக்கடவுளாய் புகழப்பெற்று
அவர்களே அச்சடித்துக்கொண்ட சுவரொட்டிகள்!
விழாமேடை...
கல்விக்கடவுள் சரஸ்வதியின்
நல்லதொரு செப்புச்சிலை!
உள்ளூர்வாசிகள் நன்கொடையளித்த
வெள்ளி குத்துவிளக்கு!
ஆரவாரங்களுக்கு மத்தியில்
அரசு வாகனத்திலிருந்து இறங்கினார்
மாவட்ட கல்வி அதிகாரி
பள்ளித் தாளாளர்
பணிவுடன் வரவேற்றார்
கல்வி அதிகாரி
மேளதாளத்தோடு
மேடை ஏறினார்
குத்து விளக்கு ஏற்றும்
சடங்கு தொடங்கியது!
உருகிய மெழுகுவர்த்தியாய் நிற்கும்
ஆசிரியையின் கையில்
உருகப்போகும் மெழுகுவர்த்தி!
தீப்பெட்டி தருவிக்கப்பட்டது
உரசினார்கள்
ஆனால் தீக்குச்சி பற்றவில்லை
அடுத்த குச்சி உரசினார்கள்
அதுவும் பற்றவில்லை
நமத்துப்போயிருந்தது
அவர்களுக்கு எப்படித் தெரியும்
அத்தீக்குச்சி
ஒரு
சிவகாசிச் சிறுமி
கண்ணீர் துளியில்
நனைந்து...
நமத்துப்போனது!