கனவோடு வாழ்பவன் நிழல்
கனவுகளில் உழன்று..
பதுங்கிப் பதுங்கி...
இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தவனை
ஏதோவொரு மிருகம் கட்டவிழ்ந்து
மூளையின் பாறைகளில் ஊர்ந்து
அலைவுறுகிறது ஒரு அரவமென.
நிலை சரியும் அவனை
நிலவின் பாதங்களில் பெருகும் ஓடைகள்
நிறக் கலவைகளால் பிளந்து
பட்டாம்பூச்சியாக்குகிறது.
அலையின் சுருளென உருளும்
முகில் மனம்
கவிதையின் கரம் பற்றி...
வார்த்தைகளைத் தட்டிச் செல்லும்.
நிலையற்றலையும்
சிறுவனாகிவிடும் அவனை
பனிக்காற்றால் நிரப்புகிறது...
அவனின் வரிகளில் குதித்தாடும்
சாம்பல் அணில்கள்.
பெருமூச்செறிய...
விடியலில் சுருங்கும் பிரபஞ்சத்தில்...
குற்றங்களின் நகல்களை ஒளித்தபடி...
தாழப் பறக்கும் இரவின் முத்தங்களோடு...
கரைகிறது...
ஒளியில் தொலைந்தவனின் நிழல்.