12-06-2015 கைந்நிலை காட்டித் தந்த கவிதைகள்
வெவ்வேறு நாட்களில் கைந்நிலை என்ற பழம்பாடல்களிலிருந்து மருத்துவர் அய்யா கன்னியப்பர் அவர்கள் பல்வேறு வெண்பாக்களைத் தளத்தில் அறிமுகம் செய்து வருகிறார்கள்.
இதுவரை அவர்கள் எடுத்துத் தந்த வெண்பாக்கள் என்னுள் எழுப்பிய எண்ணங்கள் பல ; அவற்றுள் சில அகப்பொருளாகவும் சில புறப்பொருளாகவும் அமைந்துள்ளன;ல்
அவற்றைத் தொகுத்துக் கீழே தருகிறேன்.
இனிவரும் நாட்களில் இவற்றிற்கான உரைகளை மருத்துவரய்யா அவர்கள் எனக்குத் தனி மடலில் அனுப்பிவைத்தால் அவற்றை இவைகளின் ஒவ்வொன்றின் கீழும் இணைப்பதாக இருக்கிறேன். அப்பொழுது இவற்றைத் தளத்தினர் " காளியப்பனின் கவியும் கண்ணியப்பரின் கருத்துரையும்" என்று எடுத்துச் சுவைத்து மகிழ நேரிடலாம்.
அதுவரை இவற்றைத் தளத்தினர் படித்துச் சுவைக்கலாம்:
01
குடியை விரும்பிக் குழுமுவார் ‘டாஸ்மாக்’
படியில் படரப் பார்த்தும் – குடியால்
சிதையும் குடும்பங்கள் சிந்தனை செய்யார்
எதையினிச் செய்வார் எமக்கு?
விளக்கவுரை(Dr.kanniappan-எழுதியது):
போதை தரும் மதுவைக் குடிப்பதை பெரிதும் விரும்பி, அரசின் மதுபான விற்பனைக் குழுமக் கடைகளில் கூட்டமாய்ச் சேர்ந்து குடிப்பவர்கள் குடித்து மயங்கிக் கடையின் படிகளிலும், அருகிலும் விழுந்து கிடப்பதைப் பார்த்தும், குடியால் குடும்பங்கள் அழிகின்றது பற்றியச் சிந்தனை இல்லாதவர்களாகிய அரசினர்,வேறு எந்த நன்மைகளை நமக்குச் செய்து காட்டிவிடப் போகிறார்கள்?
02
வெந்தாள்; பிரிவில் விரியலர் ஊர்புகைய
நொந்தாள்; மனங்குளிர்ந்து நோவகலச் –சந்தனம்
கொண்டுவரும் சாரற் குளிரருவி போல்வாரான்
கண்டு,நடுங் காதோ மனம்?
(அலர்=ஊர்தூற்றும் சொற்கள்)
03.
தேம்புமென் நெஞ்சு தினமும் தெருவோரம்
சாம்பித் தரைகிடக்கும் சம்பங்கி- ஆம்பலெனும்,
நோன்பின் வரங்களிவை நோக்கி; நொதி,நீரை
ஏன்தான் குடிப்பார் இவர்?
(சாம்பி=ஒளியிழந்து; நொதி நீரை=புளிக்கவைத்த நீரினை,மதுவை;)
04
பாசிப் பசுஞ்சுனை பாழ்படப் பக்கம்,வி
தேசித் தொழிற்சாலை தென்படும்!-மாசுறும்
காற்றும் நிலமும் களித்த,எம் வாழ்வுமே!
கூற்றோ குடியரசோ கூறு!
(பசுஞ்சுனை=பசுமை நிரம்பிய நீர்,நிலை,ஊருணி;
களித்த=மகிழ்ச்சி நிரம்பிய;)
05
வடித்த மதுக்கடை வாசலில் வீழ்ந்து
கிடக்கும் மணந்த,எம் கேள்வன்! – கொடுக்கும்
விலையில் பொருள்போல வீட்டினுள் நாங்கள்!
வலையில் விழுமீன்,எம் வாழ்வு!
(மணந்த=மணம்செய்த; கேள்வன் =கணவன்மார்;)
06
மதுக்கடை கண்டு மயங்கிக்,கை விட்டோர்
ஒதுக்கிய சாக்கடை ஊற்றாம் – புதுக்குலம்
எங்களுக் கென்ன இடவொதுக் கீடளிப்பீர்?
சங்கமும் வேண்டின் சரி!
07
வடித்த மதுக்கடை வாசலில் நித்தம்
ஒடித்த கதிராய் உறங்கும் – பிடித்து,கை
விட்டவன்! நாங்களோ விற்ற,எம் வாக்குகளால்
கெட்ட குடியரசின் கேள்!
(கேள்=உறவு)
08
இன்சுவைத் தேனுண் டிரைகின்ற வண்டுகளின்
பின்வரு கின்ற பிடிகள்போல்-முன்வரும்
கோட்பாளர் கண்டு கொடுக்காதே! தொண்டுசெயும்
வேட்பாளர் கண்டளிப்பாய் வாக்கு!
(கோட்பு= வலிமை;கோட்பாளர்=வலிமையுடையவர்கள்)
09
மரையா மலையுகளும் மந்திசோ லைக்கண்;
புரைதீர் மலை,நாடன் பூண்,என் –விரைசேர்
தனமுகளும் நாளுமே! தாங்கா வலியே
மனமுகளும் இன்(று)உண்டோ மாற்று?
(மரையா-காட்டுப்பசு; உகளுதல்= துள்ளித் திரிதல்; பிறழ்தல்; புரை=குற்றம்;பூண்=அணி,பரணம்; விரை=நறுமணம்;
10
மரையா மலையுகளும் மந்திசோ லைக்கண்;
புரைதீர் மலைனாடன் பூண்,என் –விரைசேர்
தனமுகளும் ! இன்றோ தவிர்த்தான் நினைப்பில்,
மனமுகளும் மாறா வலி!
11
மரையா மலையுகளும் மந்திசோ லைக்கண்;
புரைதீர் மலைனாடன் பூண்,என் –விரைசேர்
முலையுகளும் இன்றோ முரணுகளப் பார்த்துக்
கலையுகளும் ஆற்றாமை கண்டு!
(முரண்= மாறுபாடு; மனவேறுபாடு; கலை= ஆடை)
12
கன்மலை ஏறிக் கனிவாழை கைக்கொண்ட
இன்சுவை தான்மறந்(து) ஏன்,ஓடும்-வன்கடுவன்?
அன்னமலை நாடன் அவன்கேண்மை எண்ணவும்
என்மனதில் தோன்றும் பயம்!
(வன்கடுவன்=வலிய குரங்கு;அன்ன=அத்தன்மையுள்ள)
13
கருங்கைக் கதவேழம் கார்ப்பாம்பு அருகில்
இருங்கைக்கொண் டோச்சி, இறாலின்தேன் உண்ணும்
பெருங்கன் மலை,நாடன் பேண வரினே
சுருங்காதோ நோயிவட்கு சொல்!..
(கதம்=சினம்; வேழம்=யானை; கார்ப்பாம்பு=கரிய நிறத்துப் பாம்பு; இரும்=பெரிய;ஓச்சி=விரட்டி;ஓட்டி
இறால்= தேன் கூடு; பேண=பாதுகாக்க;
14
கரியகை ஆனை கரும்பாம்பு கண்டும்
பெரியகை ஓச்சியிறால் பேர்த்துண்(டு)-இரியும்
பெருங்கல் மலை,நாடன் பேண வரினே
சுருங்காதோ நோய்,இவட்கு! சொல்!.
(பேர்த்து= பிரித்தெடுத்து; இரிதல்= ஓடும்;)
15
காந்தளைத் தீயாக் கருதிக் கதவேழம்
ஏந்தித் துதிக்கை எடுத்தோடும்- சாந்தமலை
நன்நாடன் இன்றேன் நமைவிலக்கி னான்கொல்!
என்,நாடி நிற்கும் இனி!
16
மாந்திக் கடைமுன் மரணித்தார் போல்விழுந்து
வாந்தி எடுத்தார் வருந்தினராய்க்- காந்தள்
விரலால் வயிறடிப்பார் வேதனை தேர்தல்
விரலால் கிடைத்த வரம்!
(மாந்தி= குடித்து;)
17
குருதி மலர்க்காந்தள் கூர்முகை கண்டு
பொருத வருசேவல் போலெண்ணி- வெருவிப்
பிடவமர மேறுமே! பொன்னிறத் தோய்!தன்
கடமைமற வார்,வருவார் காண்!
(பிடவமரம்= கிளைகள் கொண்ட மரம்)