வேதியியல் எனும் கருவி

மஞ்சள்தூள் மல்லித்தூள்
மிளகாய்த்தூள் உப்பு புளி
எலுமிச்சை யாவும்
ஒரே குழாயில் உள்ளடக்கிய
பற்பசையாக

தோல் பிரச்சினை
பத்து வகைகளின்
கவலையின்றி சுகமாய்
வாழ குளியல் சோப்பாக

அமேசானின் அரியவகை
மூலிகையின் எரும மாட்டின்
எண்ணையாக

ஆறே வாரங்களில்
சிகப்பழகு தந்து
தன்னம்பிக்கை தரும்
முகப்பூச்சாக

கன்னியரை
கவர்ந்திழுக்க
மட்டுமே பயன்படும்
வாசனை தெளிப்பாக

மஞ்சளாடையை
வெண்ணிறாடையாய்
மாற்றும் மாயாஜால
சலவைத்தூளாக

நம் வீட்டின் 100-1%
கிருமிகளை விரட்டும்
கிருமி நாசினியாக

இரண்டே நிமிடங்களில்
தயாராகும் காரீய சத்து
இரும்பு சத்து அலுமினிய சத்து
பிளாஸ்டிக் சத்து
இன்னும் பிற சத்தை
உள்ளடக்கிய
நூலடையாகவும்

ஆண்டுக்கு கோடிகள்
இருபத்தைந்தாயிரம்
அள்ளித்தரும் டாஸ்மாக்கின்
அமுதசுரபியாக

கொள்ளை இலாபத்தை
குறிவைக்கும் கொலைகார
நிறுவனங்களின் கைக்கூலியாக
உங்கள் மேன்மையான
வேதியலை
மாற்ற வேண்டாம்




இயற்கையோடு
இயைந்த என் பாட்டன்
முப்பாட்டனின் வாழ்வான
உணவே மருந்தை
மருந்தையே உணவாக மாற்ற

உர மருந்தையும்
பூச்சிக்கொல்லி மருந்தையும்
உற்பத்தியாக்கி என்னிலத்தின்
உற்பத்தி திறன் குறைத்து
எம்மண்ணை மலடாக்க

வளர்ந்த நாடுகள்
வளரும் நாடுகளை
வளரும் நாடுகளாகவே
வைத்திருக்க
இருக்கும் மருந்துக்கு
நோய் கண்டுப்பிடிக்கும்
மகத்தான மகத்துவத்திற்கு

உங்கள் மேன்மையான
வேதியியலை
துணைக்கழைக்க வேண்டாம்




அணு உலை உட்பட
அனைத்து தொழிற்சாலை
தரும் நச்சுவாயு கழிவு
ஆற்றை காற்றை மாசாக்க
உணவுச்சங்கிலியை துண்டாக்க
வளிப்போர்வையில் துளையிட்டு
புவிப்பந்தை சூடாக்க

பனி மண்டலமுருகி
நீர் மட்டம் பெருகி
வருங்காலம் எனும் ஒன்று
சமுத்திரத்தில் மூழ்க

உங்கள் மேன்மையான
வேதியியலை
கூட்டாளியாக்க வேண்டாம்





யாதொரு பாவமறியா
என் சகோதரியின்
பூமுகத்தை பொசுக்கி
பூந்தேகத்தை நசுக்கி
அவள் வாழ்வை
நிர்மூலமாக்கிய

போபாலின்
குற்றமற்ற மக்களின்
இரவு நித்திரையை
விசவாயுவை கொண்டு
நிரந்தர நித்திரையாக்கிய

ஹிரோஷிமா நாகசாகி
அப்பாவி மக்களை
அணு குண்டு கொண்டு
கதற கதற கொன்று
குவித்த

அடையாளத்தை வேண்டி
போராடிய என் இனத்தை
அடையாளத் தெரியாவண்ணம்
அழித்துக்கொன்ற


கொடூர கொலைகாரர்களின்
கைகளில் ஆயுதமாய்
உங்கள் மேன்மையான
வேதியியலை
கொலைக்கருவியாய்
பயன்படுத்தவேண்டாம்

எழுதியவர் : தர்மராஜ் (12-Jun-15, 5:46 pm)
பார்வை : 1336

மேலே