இளையராஜாவின் இளைய ராஜா - நா முத்துகுமார்

இளையராஜாவின்
இளைய ராஜாவே..!!

உன் இசை கேட்டால்
காற்றுக்கும்
காது முளைக்கும்

நீ தொட்டால்
புல் கூட
புல்லாங்குழல் ஆகும்

அது எப்படி?
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
என்று மெல்லிசையால்
மனதை வருடும்
அதே நேரத்தில்

அடடா மழடா
அடைமழடா என்று
இடி மழையாய்
இதயத்தை தேடுகிறாய்

நண்பா..
உன் உடம்பில் ஓடுவது
இசை ரத்தம்
இசைஞானியின் ரத்தம்

அதனால் தான்
உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஹார்மோனியங்கள்
கைவிரல்கள் எல்லாம்
கீபோடுகள்

ஒரு பூ தனக்குள்
கடவுளின் வாசனையை
உணருகிற போது

ஒரு நதி தன்மேல்
விழுகிற நிலவின் பிம்மத்தை
உணர்ந்து தொடுகிற போது

ஒரு மலை மீண்டும்
தன் ஆதி பெருமூலத்திற்கு
திரும்புகிற போது

ஒரு நல்ல இசை பிறக்கிறது..

வாடாத பூவாய்
வற்றாத நதியாய்
உன் இசை தொடரட்டும்

குழந்தைகளும்
கலைஞர்களும் மட்டுமே
நேரடியாக கடவுளிடம்
உரையாடுவார் என்பார்கள்

உன் இசை
கடவுளிடம் உரையாடட்டும்

எங்கள் சந்தோஷத்திலும்
எங்கள் சோகத்திலும்
எங்கள் தனிமையிலும்
எங்கள் தன்நம்பிக்கையிலும்
இசைஞானி இளையராஜாவின்
பாடல்களே கூடவே வந்தன

இளையராஜாவின்
இளைய ராஜாவே
உன் பயணமும்
அவ்வழி தொடரட்டும்..
வாழ்த்துகள்...

#நா.முத்துகுமார்

எழுதியவர் : நா.முத்துகுமார் (13-Jun-15, 7:36 pm)
பார்வை : 88

மேலே