கனவுகள் மெய்ப்படட்டும் -ரகு
சிக்னலில் கைக்குழந்தையோடு
பிச்சையெடுப்பவளின்
ஓடிப்போன காதலனை
சிறை பிடித்தாயிற்று
இரண்டு குழந்தையைக்
கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு
தானும் தற்கொலை செய்துகொண்ட
ஓர் அபலைப் பெண்ணின்
குடிகாரக் கணவனுக்கும்
கல்லறை தயார் செய்தாயிற்று
சாமிகும்பிடப் போன பெண்ணைக் கடத்தி
கதறகதறக் கற்பழித்த
ஐந்து காமுகர்களின் சொல்லவியலாத
உறுப்புகளும் அறுக்கப்பட்டு
தொங்க விட்டாயிற்று
பாலியல் தொல்லை தந்த ஏனையோர்
கரும்புலி செம்புலி குத்தப்பட்டு
அரைநிர்வாணத்தில் கழுதையில்
ஏற்றவிருந்த தருணத்தில் தான்
பாழாய்ப் போன அந்த நாளும்
விடிந்து தொலைத்திற்று