பேருந்து பிரிவு

ஏப்ரல் சூரியன்.....
போக்குவரத்து சிக்கல் .....
அலுவலக எரிச்சல் ...
பேருந்து சலசலப்பு...
இவை அனைத்திலும் இருந்து
பத்திரமாய் பதுக்கி வைத்தேன்
களவாடிய உன் பார்வையை....
அடுக்கடுக்காய் அளவெடுத்து
இதழ் விரித்து
சிரித்து மலர்ந்த ரோசாப்பூ...
அதில்
இங்கும் அங்குமாய் சிதற விட்ட
குனிந்து நிற்கும் நீர் துளிகள்....
உன் கூந்தல் பூ அழகென
சொல்ல வந்த நா,
அதை சூடியவள் கூர் விழி
அழகென்று சொல்ல தயங்குது..
உன் பெயர் தெரியாது
ஊர் தெரியாது....
ஏன்?
உனை பார்த்துக் கொண்டே
இருந்தால் உலகம் தெரியாது.....
நீயும் நானும் கதைப்பது
காதுள்ளவர்களுக்கும் புரியாது
கூறுள்ளவற்கும் புரியாது...
விழிகள் மட்டுமே பேசி
மகிழ்ந்த வார்த்தைகள்
பற்றிக் கேட்டால்...
அவையும் விழிக்கின்றன...
பாவம்.. விடை தெரியவில்லையாம்..
"அட யாருப்பா அங்க படியில...
எத்தன முறை சொன்னாலும்
கேக்குதகளா..."
என்று நடத்துனர்
இளசுகளை அதற்றியதில்
நினைவு திரும்பியது....
கனா போல் தோன்றிய
என் பேருந்து நாட்களை...
சிறு புன்னகையுடன்
அசை போட்ட படி
பேரனை பள்ளியில் இருந்து
அழைத்து போக வந்திருக்கிறேன்...
பள்ளி நிறுத்தத்தில்
இறக்கி விட்டு...
டீசல் புகையை
கக்கி விட்டுச் சென்றது பேருந்து...
"புரியாத பிரியம்..
பிரியும் போது புரியும்..."
என்ற வாசகங்களுடன்.....