அறை

எப்போதும்
நிரம்பி வழியும்
அட்சயப் பாத்திரம்
போல
எப்போதும்
நிரம்பி வழியும்
எமது அறைகளின்
குப்பைக் கூடை

========================

அறைகளின்
தொலைகாட்சி
ரிமோட்டிலிருந்து
தொடங்குகிறது
ஒரு நகரத்தின்
பொதுவுடைமை

========================

அவ்வப்போது
வீடாகிவிடுகிறது
அறை ,
அவ்வப்போது
வந்து நிற்கும்
பக்கத்து வீட்டுக் குழந்தையால்

========================

அறை நண்பர்களின்
அகராதியில்
மச்சி என்ற
வார்த்தைக்கு
சகோதரா
என்று பொருள்

========================

ஒரு
விடுமுறை நாளில்
தூய்மை செய்யப்பட்டு
பொருட்கள்
அடுக்கி வைக்கப்பட்ட
ஓர் அறையில்
கலைந்து கிடக்கிறார்கள்
அறைவாசிகள்

========================

நாய்கள் ஜாக்கிரதை
என்கிற
அறிவிப்புப்பலகையும்
பேமிலிக்கு மட்டும்
என்கிற
அறிவிப்புப்பலகையும்
ஒன்று போலத்தான்
பிரம்மச்சாரிகளுக்கு

========================

சமையல்
செய்யப்படும்
ஓர் அறை
தெரு நாய்களின்
அம்மா மெஸ்

========================

" அம்மா என்றழைக்காத "
தொலைக்காட்சிப் பாடலிலும்
அதைத் தனியே
வெறித்துக் கொண்டிருக்கும்
ஓர் அறைவாசியின்
கண்களிலும்
வழிந்து கொண்டிருப்பார்
இளையராஜா

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (16-Jun-15, 10:50 am)
பார்வை : 169

மேலே