பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி__புயலின் மறுபக்கம்

இன்றைய சமூகத்தில் வேர்விட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கும் மதக்கலவரத்தை கருவாக சுமந்துவருமொரு கதை, புயலின் மறுபக்கமென்ற தலைப்போடு , தென்றலின் தாலாட்டாய் தேவகி என்ற பாத்திரத்தின் மெல்லிய உணர்வுகளுக்குள் அச்சுபிசகாமல் பயணிக்கும் கதையின் நிகழ்வில் எந்தவிதமான நெருடலுமில்லாதது முதல் ஆறுதல். எந்த மதமென்று எதற்குள்ளும் நுழையாது பாத்திரங்களை இயல்பாய் உலவவிட்டிருப்பது அழகு.

மதக்கலவரத்தின் கோர நிகழ்வினை உரைக்க ஆசிரியர் கையாளும் "மனிதக் கால்களின் வேகத்தையும் , தடுமாற்றத்தையும் முத்திரைப் பதித்ததுபோல் கவிழ்ந்தும் , ஒருக்களித்தும் , பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள் " அவ்வளவே நிகழ்வு , ஆனால் அதன் காட்சிப் பின்னணியாய் மனதில் எழும் கற்பனைக்குதிரை ஏதோவொரு திரைப்பட வன்முறை கோரத்தின் உச்சத்தை இயல்பாய் கொண்டு வந்து செலுத்திவிடுகிறது மனதுள்.

பிணவறையின் முன் அமர்ந்து தேவகி அழுதுகொண்டிருக்க ....அவளின் நினைவுகள் பின்நோக்கி பாய்ந்து தன் காதலும் , தன் அண்ணனின் நண்பனையே தான் காதலித்ததும் , பெற்றோர்களின் எதிர்ப்பும் , புரட்சி வித்தை தன் நெஞ்சுள் விதைத்த தன் அண்ணன் , தன் நம்பிக்கையை பொய்க்கவிடாது , உடன் தோள் கொடுத்து , தங்களை ஓன்று சேர்த்த நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து செல்ல, " நீ நாசமாத்தாண்டி போவே" என்ற அம்மாவின் ஆசிர்வாதம் ஜெயித்துவிட்டதோ ? அல்லது யாரோ சிலரின்
சுயநலம் ஜெயித்துவிட்டதோ ? என்ற கேள்விகளுக்குள் பயணிப்பதும் மனவோட்டத்துடன் இயந்த நிகழ்வுகளுக்குள் நம்மையும் மெல்ல இழுத்து செல்கிறது கதை.

தேவகியுடன், கருப்புஅங்கியால் உடல் முழுவதும் மறைத்திருந்த ஒரு பெண் பேசுவதாய் வரும் " திடீரென்று ஆவேசமுற்றவளாய் சற்று இரைச்சலுடன் எந்த பக்கத்திலிருந்தும் எந்த நாயாவது இதையெல்லாம் நினைச்சுப் பாக்குதா ? மதத்தை காப்பாத்துறேன்னு மனுசங்களை கொன்னுபுட்டா ஆச்சா ? என்ற கேள்வி இயலாமையால் தவிக்கும் ஒவ்வொரு மனிதனின் கேள்வியாய் பாய்கிறது எல்லா திசைநோக்கியும்.

ஆரியர்களின் ஒருபகுதி இந்தியவிற்குள் வந்து வைதீக வேத மதத்தையும், மற்ற இரு கூட்டத்தினர் ஈரானுக்குள்ளும் , கிரீஸ்ற்குள்ளும் சென்று இஸ்லாத்தையும் , கிறிஸ்த்தவத்தையும்
பரப்பினார்கள் என்றும், நம் மூதையார்கள் ஒருவரே , ஆதலால் மதத்துவேதம் தேவையில்லை என்பதையும் தேவகியின் வரலாற்று ஆசிரியர் கூற்றாய் வரும் நிகழ்வில் , மனிதர்கள்,மதங்கள் குறித்து புதிய இலக்கணத்தை தருகிறது.

உயரதிகாரி வந்தவுடன் பிணம் கிடைக்கும் என்ற தகவலும் , பிணத்தினை வாங்க பகலெல்லாம் காத்து கிடக்கும் இன்றைய உண்மை நிலவரத்தையும் , அதன் வலிகளையும் உரைத்துவிட்டு , " அவங்க அவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்து பாலம் சுடுகாட்டுக்கு கொண்டு போக வேண்டியதுதான் . அங்கதான் பக்கம் பக்கமாய் எல்லா சாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே , உயிரோடு இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடுற மத்தவனெல்லாம் , இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்குப் போற பிணங்களைப் பார்த்தாவது யோசிப்பாங்களா " என்ற கேள்விகளும் ஆசிரியர் இக்கதை மூலம் இச்சமூகத்தின் இழிநிலையை சாட்டையடி சொற்களால் உடைத்து நொறுக்க எத்தனிக்கும் முயற்சியும் புலப்படுகிறது.

மரித்துப்போன பின் மதங்களும், மனிதர்களும் உடன் வருவதில்லை , பக்கத்தில் புதைத்தாலும் எந்த பிணமும் எழுந்து சண்டையிடுவதுமில்லை , மனிதனுக்குள் மடமை பூண்டு , தன்னிலை மறந்து ஆறறிவின் தூண்டுதல் இழந்து மிருகங்களின் கீழ்நிலை நோக்கி நகரும் கொடுமைகளை இக்கதை மூலம் சாடுகிறார் ஆசிரியர். கடைசிவரை இறந்துபோன தேவகியின் கணவர் யாரென்று உரைக்காமல் , போலிஸ் உயரதிகாரி ஒவ்வொருவராக கேட்டுவிட்டு கடைசியில் தேவகியிடம் , இறந்தது யாரு , வயதென்ன , பெயரென்ன என்ற கேள்விகள் கேட்க , இறந்தது என்கணவர், வயது 28 , பெயர் " அப்துல் காதர் " எனச் சொன்னதும் , என்ன ...என்ன .. என்ன சொன்னீங்க என்று திகைப்பதும் , மறுபடியும் அவள் அப்துல் காதர் என அழுத்தி சொல்வதும் கதைக்குள் புதிய தேடலின் உயிர்ப்பை கிளறிவிடுகிறது புது கேள்விகளால் .

இறந்தது அப்துல் காதர் , அழுவது தேவகி எனில், பாதிக்கப்பட்டது முஸ்லிமா , அல்லது இந்துவா , அல்லது கணவனா , மனைவியா , மொத்தத்தில் மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களும் , செத்துக்கொண்டிருக்கும் மனிதமும் , இந்து -முஸ்லிம் திருமணத்தை ஆதரிக்கும் மனிதர்கள் ஒருபுறம் வந்துவிட்டாலும் இன்னமும் , மதத்தின் புனிதத்தை , அது உரைக்கும் நல்வழியை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு , மனிதர்களை கொன்று , "மதம் " பிடித்து ,மதம் வளர்க்கும் கூட்டத்தை நோக்கி எழுப்பிய நெருப்பு சுடராய் இக்கதையை காண்கிறேன் . புதிய யுக்தி , புது வேகம் , தொடங்கியது முதல் இறுதிவரை வாசிப்பவனை கயிறுகட்டி இழுத்துசெல்லும் லாவகம் , ...." புயலின் மறுபக்கம் வெகு சீற்றமாய் " .......வாழ்த்துக்கள் அபிசார் , வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இந்த கட்டுரை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்

@@ குமரேசன் கிருஷ்ணன் @@

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (16-Jun-15, 11:34 pm)
பார்வை : 165

சிறந்த கட்டுரைகள்

மேலே