போர் உதிர்த்தவை

அற்பம்
அசாத்தியம்
ஆணவம்
ஆதிக்கம்
ஆவேசம்
ஆபத்து
அத்தனையும் அன்று அங்கு

வாள்களுக்கு வாய் முளைத்து
வெறியூறி
மனிதர்களை விழுங்கும்
வயிறு கொண்டு காத்திருந்தது

போரை தூர் வாரி
போர்க் களம் வாங்கினார்கள்
கொஞ்சத்தில்
மனிதர்கள் விதைக்கப்படுவார்கள்

அடித்து விழும் மழையாய்
வெடிக்கப் போகுது
யுத்த மேகம்

யுத்த ரதத்தில்
மரணம் ஊர்வலமாய்

தன் மரணத்தை
தானே திருடும்
தருணம் அன்று

துவக்கையின்
குண்டுக் குழந்தைகளுக்கு
அன்று மரண விளையாட்டு

உக்கிரத்தை காட்ட
உச்சகட்ட ஏற்பாடுகள்
காலாவிதியாகாத
காலனின் படையாய்
கருக்குளத்தில் தங்கி வராதவர்களின்
அருவருப்பான அணிவகுப்பு அன்று

வெள்ளை புறாக்கள்
குருதியுடுத்தி
குண்டு துளைக்கும்
இதயம் ஏந்தி
அரக்க வெறியின்
நெடி ஏற்றி
கூட்டமாய்
தனித்து விடப்பட்டிருக்கும்
அன்றைய போர்
கட்டாய மயான கல்யாணம்

காட்டில் இருக்க வேண்டியவை
நாட்டில் புகுந்தன
நாட்டினருக்கு
சுட்டுப் பணிவிடை
நாடெங்கும் பிண வாடை

அம்மாவின் கருவறையில்
அப்பாவின் உருவை
காணும் ஆவலில்
காத்திருக்கும் அவனுக்கு
கருணை கிட்டவில்லை
காரணம்
சட்டென மரணம்
அப்பாவை பார்க்க முந்தி விட்டது

விசத்தை கக்கும்
பீரங்கி பாம்புகள்
கொத்து கொத்தாய்
கொத்திப் போனது
கொடுத்து வைக்காதவர்களை

உயிர் திருடப்பட்டவனின்
மனத் திரையில்
கடைசிக் காட்சி
தாய் நாடல்ல
தன் வீடு

காலாட் படையின்
வேட்டை
நாட்டை நிர்வாணமாக்கியது
இன்னொரு புறம்
காமப் புரவிகளின்
வேட்கை
பூக்களை புடவையுரித்து
நிர்வாணமாக்கியது

போரிட்டும்
போன கற்பால்
கிருமி புகுந்திட
கர்ப்பம் முளைத்தால்
முல்லை மகளொருத்தி
தலைப்பு இல்லா கவியாய்
கொட்டித் தீர்த்தாள்
பிள்ளையை

தானாய் வளராத
இந்த நாட்டு மரத்திற்கு
நீரூற்ற நாதியின்றி
போரின் பிரசவத்தால்
ஓர் போர்க் குழந்தை


போரில் கொல்லப்பட்டவன்
தாயின் நிலையறிய
உடலை விட்டு
ஓடி வந்தான்
பாதி வழியில்
மகனின் நிலையறிய
கொலையுண்ட தாய்
ஓடி வந்தாள்
இருவரும் யுத்தம் இல்லா
பூமி நோக்கி பயணமானார்கள்

எழுதியவர் : Raymond (18-Jun-15, 2:53 am)
சேர்த்தது : Raymond Pius
Tanglish : yuththa sattham
பார்வை : 248

மேலே