ஒரு வானம்பாடியின் சாயுங்கால ஏக்கம்

என் விழிகளில் அலையும்
அந்தி மேகங்களை
விலக்கி
உங்களை என்னால்
பார்க்க முடியவில்லை

ஓர்
ஒப்பாரிக்குள்
புதையுண்டுப்
போகிறதோ
பூபாளம்?

மரணப் பூவின்
சூலாகிறதோ
என்
வாழ்க்கை?

ஒரு
மௌன யாத்திரைக்குத்
தயாராகிறதோ
என் வார்த்தை?

*

என்
அனுபவக் கரையை நோக்கி
ஓடங்கள் வருகின்றன
நான்
பூக்களை ஏற்றி வைப்பேன்

எனது ஊஞ்சல்களில்
காயங்கள் வந்தமரும்
நான்
கண் மூட வைப்பேன்

என் சந்தையில்
நீங்கள் கூடுவீர்கள்
நான்
கனவுகள் விற்பேன் ***

என் பா(ப)ட்டறையில்
சிறைப்பட்ட கைகள் வரும்
நான்
தளைகளைத் தகர்த்தெறிவேன்

இன்று என்
விழிகளில் அலையும்
அந்தி மேகங்களை
விலக்கி
உங்களை என்னால்
பார்க்க முடியவில்லை
*
இது ஒரு
மயக்கம்
புதுவிதமான
மயக்கம் ..
*
இந்த மயக்கம்
சுகமானது
ஆனால் நான்
மயங்க விருமபவில்லை

இந்த முடிவு
நிஜமானது
ஆனால் நான்
உதிர விரும்பவில்லை

மரணம் என்னை
நுகர்ந்து விடாமல்
என் கவிதையின்
சிறகே......
எங்காவது என்னைக்
கவ்விக்கொண்டு போ ! (1992)


("ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் " நூலின் இறுதி கவிதை)

(***கனவுகள் விற்பேன்***.. காண்க "ஒரு தெய்வமகள் கனவுகள் விற்கிறாள் " சிறப்புக் கவிதை 61)
**********************************************************************************************************************************************

எழுதியவர் : கவித்தாசபாபதி (18-Jun-15, 5:12 pm)
பார்வை : 88

மேலே