காலைச் சாரல் 01 - கோபம்

அதிகாலை விழிக்கும் பொழுது தோன்றும் எண்ணங்கள்....
16-6-2015
அதி காலை 5:00 மணி

சூரியன் வெளி வராமல் வெளிச்சத்தை தூவிக் கொண்டிருந்தான்.
இருட்டுப் போர்வைகள் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டிருந்தது,..
வானம் வெளிர் நீலத்தில் இதமாக இருந்தது....
தூரத்தே ஓர் இளம் கார்மேகம் என்ன செய்வது என்ற யோசனையில் தயங்கித் தயங்கி நின்றதா நகர்ந்ததா என குழப்பியது.
அருகில் இருந்த வேப்ப மரம் தன் எல்லாக் கிளைகளையும் குலுக்கி இதமான காற்றை வீசியது....
காற்றின் குளுமை மனதைக் கொஞ்சம் அமைதிப் படுத்தியது.
நேற்று மாலை இதே நேரம் இருந்த வெப்பம் இப்பொழுது இல்லை - அந்தக் கோபமும் தான்...
மனதை அமைதிப் படுத்தும் தத்துவங்கள் தோன்றலாயின...
யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற தாரக மன அமைதிப் பாட்டு உள்ளே இசைக்கத் துவங்கி விட்டது....

மணி 5:30.
எப்பொழுதும் போல் அந்த 80+ தாத்தா நடை துவங்கி விட்டார்.
இரண்டு காக்கைகள் ஒரு வட்டமடித்துச் சென்றன...

இதுவும் கடந்து போகும் என்றே மனம் அமைதியுறுமா..,?
இல்லை எதுவும் கடந்து போகட்டும் என்றே சும்மா இருக்குமா...?
யார் என்ன தில்லு முல்லு செய்தால் நமக்கென்ன....
இருங்கள் இன்னும் சிறிது நேரத்தில் செய்தித் தாள் வரும்
நாட்டின் / உலகத்தின் தில்லு முல்லுக்களைச் சந்திக்கத் தயாராவோம்...

இப்பொழுது மனம் கொஞ்சம் அமைதியானதோ..... ?
வெய்யில் ஏற ஏற நிலமை மாறுமோ.... ?
அந்தச் சர்ப்பம் தலையைக் காட்டி விட்டு பொந்துக்குள் முடங்கி விட்டதோ...?
மனித மனத்தை யாராவது ஓரிடத்தில் கட்ட முடியுமா....
------ முரளி

எழுதியவர் : முரளி (22-Jun-15, 10:03 am)
பார்வை : 263

மேலே