காலைச் சாரல் 03 மொழி

அதிகாலை விழிக்கும் பொழுது தோன்றும் எண்ணங்கள்....
22-6-2015

எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையை இந்தக் கேள்வியுடன் ஆரம்பிக்கிறார்.

வயது, விதம், நியதி, தருணம், சுகம், ஞாபகம், கேலி, அற்புதம், அவசரம், அவதூறு, சித்திரம், பாத்திரம், பயம், பைத்தியம். வாசனை, வேகம்.

மேற்கண்ட சொற்களில் வட மொழியிலிருந்து வந்த சொற்கள் எவை என கூற முடியுமா உங்களால்?
* * *
இப்பொழுது காலை மணியென்ன என்று குறிப்பிடப் போவதில்லை. கூறினால் ப்ரியன் திடுக்கிட்டு "யாரிங்கே நள்ளிரவில்... இ... இ.... இ...." என்பார்.

எனக்கென்னமோ ஈ... ஈ... ஈ.... பொருத்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது...
இந்த இ... இ.... இ.... என்று சிரிப்பதைத் தமிழ்படுத்தித் துவக்கியவர் சந்தோஷ் என்று நினைக்கிறேன்.... ப்ரியன் விடாமல் பின்பற்றி வருகிறார்.

ஹ... ஹா.... வை இ...இ.. ஆக்கியவர் 'ஷ்'-ஐ என்ன செய்யப் போகிறார்...?
* * *
கையில் சுஜாதாவின் 'கணையாழி கட்டுரைத் தொகுப்பு உள்ளதால் சில நாட்கள் அவர் பாதிப்பு இருக்கும்.... . (நேற்றே "எது ஹைக்கூ" என்ற கட்டுரையை காப்பி அடித்து தளத்தில் பதிந்தாகிவிட்டது..)

கையில் வந்த ஒரே நாளில் 200 பக்கம் தாண்டியாகி விட்டது. அது என்ன அவ்வளவு தீவிரம்... கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கக் கூடாதா என்றால் சின்ன வயசிலிருந்தே இப்படித்தான்...... ஒரே நாளில் முடித்த நாவல்கள் பல உண்டு.... ஆனால் இப்பொழுது கை, கால் மரத்துவிடுகிறது.... கழுத்து வலிக்கிறது.... சில சமயம் அப்படியே கண் இழுத்து விடுகிறது.... (சுஜாதாவும், PG Wodehouse-ம் விதி விலக்கு - சிறிது வயிற்றிர்க்கு உணவு வரும் பொழுதுதான் அவர்களுக்கு ஓய்வு)
* * *
என்னைப் போன்ற தீவிரவாதிகளைப் பற்றிப் பேசும் பொழுது நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த நண்பனின் தொலைபேசி அழைப்பு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒன்றாக கல்லூரியில் படித்தவர். பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரி... தீவிரமாக என் உடல் நலத்தை விசாரித்த பின்.. அமைதியாகக் கூறுகிறான் போனவாரம் அவன் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்று... அலுவலக்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தலை வெடுக் வெடுக்கென்று இழுத்துக் கொண்டு சாய்ந்து விட்டானாம்... என்ன நடந்ததென்று தெரியவில்லை எப்படிப் பிழைத்தேன் என்று தெரியவில்லை... யாரிடமும் சொல்லாதே (குறிப்பாக அவன் மனைவியிடம்) மூளையில் ரத்தத் தடை என்கிறான்... அடுத்த வாரம் இந்தியா வருகிறான்...

தீவிரத்திற்கு நல்ல உதாரணம் இவன்... நூறு ரூபாய் சம்பளம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்வான்.... ஒரு முறை 30% ஊதிய உயர்வு கிடைத்தபோது 'வாங்கும் சம்பளத்திற்கே வேலை இல்லை - வேண்டாம் உயர்வு' என்று திருப்பித் தந்தவன். அப்படிப் பட்டவன் தங்க பங்களா, எல்லா வீட்டு வேலைக்கும் ஆட்கள், வாகனம், வாகன ஓட்டி எல்லாம் கொடுத்தால் தினம் 30 மணி நேரம் வேலை, வேலை, வேலைதான். கூடுதலாக குடும்பம் இந்தியாவில் - ஐயாவைப் பிடிக்க முடியாது. அடுத்த வாரம் வருகிறான். எல்லாவற்றையும் விட்டு விடச் சொல்லியிருக்கிறேன்.
****
"குனியும் போது, நிமிரும் போது தலை சுற்றுகிறது என்றீர்களே இன்னிக்காவது டாக்டர் கிட்டப் போறீங்களா...? இல்லையா...?" எனறு உரத்த குரலில் கேட்கிறாள் மனைவி. இன்னும் காப்பி வரல...
* * *
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் "அனைத்தும்" என்கிறார் சுஜாதா!

------- முரளி

எழுதியவர் : முரளி (22-Jun-15, 9:17 am)
பார்வை : 209

மேலே