மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள் இன்னே வரும் - கைந்நிலை 10

கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

பொன்னிணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்
மின்னி னனையவே லேந்தி யிரவினுள்
இன்னே வருங்கண்டாய் தோழி யிடையாமத்
தென்னை யிமைபொரு மாறு. 10 - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பொருளைப் புரிந்து கொள்ள ஏதுவாக சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன.

பொன்இணர் வேங்கைப் புனம்சூழ் மலைநாடன்,
மின்னின் அனையவேல் ஏந்தி, இரவினுள்
இன்னே வரும்கண்டாய் தோழி! இடையாமத்(து)
என்னை இமைபொரு மாறு? 10

பொருளுரை:

என்னுயிர்த் தோழியே! பொன் போன்ற விரிந்த மலர்களையுடைய வேங்கை மரங்களடர்ந்த சோலைகள் (புனம்) சூழ்ந்திருக்கும் மலைநாட்டை உடையவனாகிய தலைவன் மின்னலைப் போல ஒளிவீசும் வேல் ஆயுதத்தைக் கையில் ஏந்தி, இரவின் நடுச்சாமத்தில் இப்போதே வருவான், காண்பாய்; அவ்வாறுயிருக்க, என் கண்ணிமை ஒன்றோடொன்று பொருந்தி நான் உறங்குவது எப்படி? என்று அவன் வருவதை நினைந்து தலைவி கவலையுறுகிறாள்.

விளக்கம்:

இணர் – மரங்களில் விரிந்த மலர்களையுடைய பூங்கொத்து. வேங்கை மலர் பொன் போன்றது.

புனம் என்றது மலையைச் சூழ்ந்த காடுகளைக் குறித்தது.

தோழி இரவுக் குறி நேர்ந்தவள் ஆதலால் தலைவியை எழுப்புவதற்கு அவள் உறங்கும் இடம் சென்றாள். உறங்காது விழித்திருப்பது கண்டு ஏன் இவ்வாறு விழித்திருக்கின்றாய் என வினவியபோது அவள் கூறியது. தலைவன் தனியனாய்க் கையில் வேலேந்தி நள்ளிருளில் வருவதை எண்ணினேன். புலி கரடி முதலிய பொல்லா விலங்கினங்களும் அரவும் பேயும் வழங்கும் வழிகளைக் கடந்தன்றோ வர வேண்டும்? அவனுயிர்க்கு இடையூறு நேரினும் நேருமே! நேர்ந்தால் என்னுயிர் நிற்குமோ? இத்தகைய களவொழுக்கம் என்னாலன்றோ நேர்ந்தது! என்று எண்ணி எண்ணிக் கண்ணிமை சிறிதும் பொருந்தாது கலங்குகின்றேன். இதனை நீக்கும் சூழ்ச்சியை ஆய்ந்து விரைவில் செய் எனக் கூறுகிறாள்.

அவன் கைப்பற்றிய வேலால் வழியறிந்து வருகின்றான் என்பதை விளக்க ’மின்னின் அனைய வேலேந்தி’என்றார்.

தோழி சென்று தலைவியைக் கண்ட சமயம் அரையிருள் ஆதலால் ’இன்னே வரும்’என்றாள்.

’என்னை’என்பது எங்ஙனம் என்ற பொருளைத் தந்தது. கண்டாய் - ஆராய்வாய் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும்.

ஏதம், ஏது, துன்பம் - suffering, affliction, 2. fault, flaw - குற்றம்; 3. Destruction - கேடு.

இரவுக்குறி - trysting place fixed for clandestine lovers to meet.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-15, 3:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 175

மேலே