இது கவிதையல்ல..


கருவரை வாழ்க்கையை நான் "கரு வாழ்வு" என்பேன்.
கண் திறந்த போதுதான், அன்பெனும் அன்னையைக் கண்டேன்.

காலம் கால்களைக் கொண்டு சென்ற தூரம்,
கண்களுக்குப் புரியவே இல்லை..
காலைக் கல்வியும்,
மாலை விளையாட்டும்,
கண்கவரும் காட்சட்டையும்,
கடைத் தெருவில் தீன் பண்டமும்,
மறந்துவிட்டேன் மொத்த சுவடுகளையும் சேமித்து வைக்க..

இதுதான் உலகு, இதுதான் வாழ்க்கை என்று புரிந்ததும்,
இரு கண்களைத் திறந்துகொண்டும் உறங்கலாம் என்பதை உணர்ந்துவிட்டேன்.

காசுக்கு வாழும் கூட்டமிது,
கண்களை அடகுவைத்தாவது,
கடனுக்கு வாங்கக்கூட,
கடைத்தெருவில் மனித நேயம் இல்லை.

ஏழைகளும் கோழைகளும்,
பணத்துக்கும் பயத்துக்கும்,
உடலையும் உணர்வுகளையும்; ஏன்
உயிரையும் உடைமைகளையும் இழப்பது,
மணித்தியாலங்களின் வினாடிகளுக்குள்,
ஆக்கிரமித்து நன்கூரமிட்டுவிட்டது.

காட்டிளிருக்க வேண்டிய நரிகளும்,
புலிகளும், சிங்கங்களும், சிறுத்தைகளும்,
காட்டில் பிறந்திருக்கவேண்டிய,
எச்சை உண்ணும் நாய்களும்,
வீட்டிலும், வெளியிலும்,
காரியாலயத்திலும், கடைத் தெருவிலும்,
இரத்தமும் சதையும் உண்ண,
விழிவைத்துக் காத்திருக்கின்றன..

கண்களைத் திறக்க முடியவில்லை,
காணுமிடமெல்லாம் விஷக்கிருமிகள்.
கால்களைக் கூடத் தூக்கி,
வாழ்க்கையைத் தொடர முடியவில்லை.

முன்னாள் சிரிப்பதும், பின்னால் சீறுவதும்,
மிருகங்களுக்குக் கூட இல்லாத எட்டாம் அறிவு எங்களுக்கு.

ஏமாற்றங்களை மட்டுமே கண்டத்தில்,
காற்றுடன் சேர்த்து, நம்பிக்கையும் கலந்து,
பறந்துவிட்டது, முகவரி இல்லா இடத்துக்கு.

சிரித்தபோது எடுத்த புகைப்படங்களில்,
புன்னகித்த பற்கள் மட்டுமல்ல,
காற்றினை மட்டுமே மென்று உண்டதில்,
உடைந்துபோன உணர்வுகளும்,
வறுமையின் அர்த்தமும், வலியும்,
கண்களின் ஒரு ஓரமாக..

சொந்தங்களும் பந்தங்களும்,
அயலவரும், நண்பரும்,
காசு, சுயநலம் இரண்டுக்கும் அடிமைகள்.

இதற்குமேல் நடக்க என் பாதங்களுக்கு வலிமையில்லை..
புரிந்துகொண்டேன் இது பிறப்பிற்கும்,
புதை குழிக்கும் இடையில் உள்ள பாதை என்று.

கண்ணீர்த் துளிகளை எழுதவந்த,
பேனா முனையையே, கைகள்,
காலம் போட்ட கோலங்களின் ஒரு புள்ளியைக்
கிறுக்க வைத்துவிட்டது.
இதில் எனது பாதங்களையும் சுவடுகளையும் சொல்ல,
ஒரு கவிதை தேவைப்படும்...

எழுதியவர் : ஜிப்ப் (12-May-11, 9:09 pm)
சேர்த்தது : jiff0777
பார்வை : 413

மேலே