முகூர்த்த நேரம் -Mano Red

மூக்கு சிந்திய
முந்தைய காலம் முதல்,
முகப்பரு கிள்ளிய
முந்தாநாள் வரை
மூக்குத்தி குத்திக் கொள்ள
அத்தனை ஆசை அவளுக்கு...

போகிற போக்கில்
முகக் கண்ணாடியில்
முகம் நோக்கும் போதெல்லாம்
பாதரசம் தேயத்தேய
முகத்தை விட
மூக்கைத் தடவி
வெக்கத்தில் சிவந்து போவாள்..!

ஓசையில்லாத ஆசை
மூக்கில் நிறைவேறுமோ இல்லை
குறையாகுமோ என
அவ்வப்போது கிடைத்த
மூக்குத்திப்பூ குத்தி
முகம் மலர்ந்து கொள்வாள்..!!

அங்கேயும் தெய்வம் தான்
குறுக்கே நின்றது.
குலதெய்வ வேண்டுதலின்
குறை காரணமாக -அவள்
குடும்ப வழக்கங்களில் ஒன்று
மணமேடையிலே
மூக்கு குத்துவது என்ற
கலாச்சார சமாச்சாரம்..!!

அந்நாளும் வந்தது...
பணவாசமும்
மணவாசமும் துறந்து
வனவாசம் துணியும்
துறவியின் மனநிலையுடன்
மணக்கோலத்தில் அவள்
மூக்கைச் சொறிந்தபடி
முக்கி திக்கி நின்றிருந்தாள்..!!

அப்போது சொன்னார்கள்
மணமகன் எதோ
முற்போக்குவாதியாம்,
மூக்குத்தி குத்துவதையும்
பெண்ணடிமைத்தனம் என்பாராம்,
முகூர்த்த நேரம் நெருங்க
மூக்குத்தி கனவும் சுருங்க
அவளோ அவனுக்கு
அடிமையாக கழுத்தை நீட்டினாள்..!!

எழுதியவர் : மனோ ரெட் (23-Jun-15, 10:25 am)
பார்வை : 138

மேலே