தெய்வம் சான்ற திறல் -3
மதப் போதகர் ஒருவர் ஒரு நாள் சமுத்திரத்தில் விழுந்து விட்டார். அவருக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. அவர் நீரில் தத்தளிப்பதைப் பார்த்து அவ்வழியே வந்த கப்பலின் தலைவன்
“உங்களுக்கு உதவி தேவையா? எனக் கேட்ட பொழுது, அவர்,
“என்னைக் கடவுள் காப்பாற்றுவார்”
எனக் கூறி விட்டார். சிறிது நேரம் கழித்து அவ்வழியே படகு ஓட்டி வந்த மீனவர் ஒருவர்,
”உங்கட்கு உதவி செய்யட்டுமா?”
எனக் கேட்ட பொழுது,
“ இறைவன் என்னைக் காப்பாற்றுவார்”
என அதே பதிலைக் கூறினார். சிறிது நேரத்தில், மூச்சுத் திணறி இறந்து விண்ணுலகம் சென்றடைந்தார். அங்கு கடவுளைக் கண்டதும்,
“இறைவா, உம் மீது அத்தனை நம்பிக்கை வைத்து இருந்தேனே, ஏன் என்னைக் காப்பாற்றவில்லை” எனக் கேட்டார்.
“முட்டாளே, இரண்டு படகுகளை அனுப்பினேனே, நீ ஏன் ஏறவில்லை” எனக் கடவுள் பதில் அளித்தார்.
கடவுளை, இறைவன் எனக் குறிப்பிடுவது ஏன் என ஆய்ந்தோமெனில்,
”நுதல் வழி நாட்டத்து இறையோன்”
(மணிமேகலை 1—14)
என நெற்றிக் கண் கொண்டு விளங்கிய களவியல் உரைத்த பெருமான் இறையனார் எனக் குறிக்கப்பட்டுள்ளது கான்கிறோம்.
சிலப்பதிகாரம் (10—184)ல் “இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்” என்பது அருக தேவனைச் சுட்டியது. ஆயினும் சூடாமணி நிகண்டிலோ, பிங்கலந்தயிலோ, சேந்தன் திவாகரத்திலோ அருகதேவனை இறைவன் எனக் குறிப்பிடவில்லை.
அடியார்க்கு நல்லாரின் கூற்றுப்படி, “எப்பொருளிலும் தங்குபவன்” இறைவன் என்பது உமாபதி சிவாச்சாரியாரின் திருவருட்பயன் எனும் குறட்பா நூலில் முதல் குறளாகிய,
அகர உயிராகி அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து
என்பது, எங்கும் அறிவாகி, நிறைந்து தன்னிகரில்லாமல் நிற்கும் பரம்பொருளையே சுட்டுகிறது.. இதனை ஒட்டியே இறைவனுக்கு, ‘தெய்வம் எனும் பெயரும் விளங்குவதாயிற்று. “த்யுதி” எனும் வடமொழி வேர்ச்சொல்லை ஆதாரமாகக் கொண்ட, ’தேவா’ என்பது ஒளியைக் குறிக்கும் சொல் ஆகும்.
”தெயென் கிளவி கொளற்பாடும் தெய்வமும்
தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும்
என்ற பிங்கல நிகண்டின்படி, “தே”, “தெய்” எனும் சொற்களில் இருந்து தெய்வம் பிறந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம். ஆயினும், தெய்வம் எனும் சொல்லை தொழில் பெயராகக் கொள்ளுங்கால், தை வருதல் (தடவுதல்) அல்லது மெல்ல வருடிக் கொடுத்தல் என்ற பொருளைத் தரும். உடல், மன துன்பங்களுக்கு ஆறுதல் கொடுக்கும் பொருள் தெய்வமன்றி வேறு இல்லை என்பது கண்கூடு.
கடவுள் என்றால் என்ன என விளக்கப் போந்த நக்கீரர் தம் திருமுருகாற்றுப் படையில் (பாடல் வரிகள் 287 முதல் 290 முடிய) இவ்வாறு கூறுகிறார்.
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி
என்று தெய்வத்தின் பண்புகளை விளக்குகிறார். .’தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்” என்ற முதல் அடியின் வாயிலாக மனிதரின் அகத்தே நின்று, மெல்ல வருடி நம்பிக்கை ஊட்டி நிற்கும் நிறைவான திறமை விளங்கும் ஒளியே உருவமற்ற அதன் உரு ஆகும் எனக் கூறுகிறார்.
நிறைவான தெய்வப் பண்பும், ஆற்றலின் நிறைவும், செயற்படுத்தும் வலிமையும், செழுமையும், ஒளியும் அமைந்த உரு எனச் சொல்லும்போது காட்சிக்குப் புலனாகும் ஒளி, காட்சிக்குப் புலனாகா அருவம் ஆகிய ஒரு பொருளாகிய இறைவனை “வெளி” எனக் கொள்ளுதல் மரபாகும். இந்த விளக்கத்தின் ஒளியில் பார்க்கும்போது, ‘தெய்வம் சான்ற திறல்” என்பது பொதுவாக “அருள்” என விளங்கிக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் தெய்வம் சான்ற திறல் விளங்கிய நிலையில் நின்ற பொருள், சமுதாய நன்மைகளை நோக்கித் தானே கீழிறங்கும் தன்மைத்து என்பதாலேயே நக்கீரர் அடுத்த வரியில்,
’வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி’
எனக் கூறினர். அதற்கு அடுத்த வரிகளில்
‘அணங்குசால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன்
எனும் வரிகளின் வாயிலாக அவ்வாறு வரும் அப்பொருள் அழகினால் அனைவரையும் தன்பால் ஈர்த்து, அச்சமுறச் செய்கின்ற தன்மை உடைய அணங்காகவும், பிறரை ஈர்ப்பதும் ஈர்த்து அச்சுறுத்துவது ஆகிய அணங்கு நிலையுடன், நிறைவும் உயர்வும் உடையதாய் நின்ற பொருள் என்றும்
’மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி’
நிற்பது எனும்போது அது தெய்வ மணத்துடன் பிறருக்காக அல்லது பிறவற்றிற்காக தழுவிக் கொண்ட பண்புகள் கொண்டு வந்தது என்கிறார்.
மேற் சொன்ன மூன்று நிலைகளில் “உரு” த்தாங்கி வந்த தன்னையே ஆன்மாக்கள் துய்த்து நலம் பெறுவதற்காக வந்த எளிமையை, உயர் பண்பினை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தொல்காப்பியம் (1034)
கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடு நீங்கி சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
என வரையறை செய்துள்ளது. முன்னர் நக்கீரர் கூறிய “வான்தோய் நிவப்பிலிருந்து தான் வந்து நிற்கும்” தன்மை-- ’கொடி நிலை’ என்றால், “தெய்வம் சான்ற திறல்”- ’கந்தழி’ என்றும், தழுவிக் கொள்ளப் பெற்று பண்புகளாக நிற்கும் அணங்காதல் தன்மை போன்றவற்றை “வள்ளி”
என்றும் கொள்ளலாம்.
ஆன்மாவினுள் பரம் என்ற தனிப்பொருள் கலந்து நிற்றல் இயற்கை ஆகும். எனினும், பரம்பொருள் தன் இருப்பைப் புலப்படுத்திக் கொள்வதில்லை. ஆயினும், ஆன்மா அறிவாலும் செயலாலும் இறைவனோடு ஒன்றித்து இருக்கும் நிலை ஒன்றும் உண்டு. அப்போது ஆன்மாவின் அறிவு, இச்சை, செயல்கள் ஆகிய மூன்றும் இறைவனின் அறிவு, இச்சை செயல்களாக மாற்றம் பெற்று, பிறரையும் அத்தன்மைகளை உணருமாறு செய்யும்..
“என்னை உடையவன் வந்து என் உடனாய் என்னளவில்
என்னையும் தன் ஆளாகக் கொள்ளுதலால்—என்னை
அறியப் பெற்றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப் பெற்றேன் குழுவிற் சென்று”
எனும் திருக் களிற்றுப் படியார் செய்யுள் இதனையே செப்புகிறது.
பரம் என்று நின்ற பொருளுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் ஒருவகை ஒத்த நிலை உண்டெனில் அதனைச் செயல்படுத்தும் நிலையில் திண்மையும் அந்த ஆன்மாவுக்கு அளிப்பவன் அந்தப் பரமனே. இறைவனும் ஆன்மாவும், தொண்டு செய்யும் குலத்தவர்கள். இந்த கற்பு நிலையை, தொண்டு நிலையை, மாறாது, மாற்றாது பேனும் நிலையை அருள்வதும் இறைவனே. இறைவன் அளித்தால் மட்டுமே ஆன்மா பெறும் தகுதி உடைத்தாகிறது..
அ. தெய்வம் சான்ற திறல் விளங்கு நிலை என்பது நடுநிலை திணை நிலை=பாலை நிலை(Physical stage)
ஆ. வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்துதல் மற்றும்
இ. அனங்குசால் உயர் நிலை தழுவுதல்—ஆகிய இவை (ஆ+இ) இரண்டும் அப்பாலை நிலை=(Meta physical stage)
ஈ. மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டும் நிலை –அப்பாலைக்கு அப்பாலை நிலை (Meta meta physival stage).
மணிவாசகரின் திருவாசகத்தில். “அப்பாலைக்கு அப்பாலை” என்பது பொளதிகப் பொருளாகிய பாலை நிலை; கடந்த பொளதிகப் பொருள் (அப்பாலை) ஆகிய இரண்டும் ஒன்றே, வேறே என்ற இரு பகுதிகள். இவை இரண்டும் இணைதல் இல்லை. இவை இரண்டன் நடுவேதான் சுத்தபாலை தோன்றும். எனவே இவைகளை புலனுக்கு விடயமாகும் பொருள், புலனை கடந்த பொருள், இருமையும் கடந்த பொருள் என அப்பொருள்களின் மூவகை நிலைகளைக் குறிக்கலாம் என முனைவர் வை. இரத்தினசபாபதி தம் சைவ சித்தாந்த ஆன்மக் கொள்கையில் விளக்குகிறார். *
(*--பக்கம் 22—33—சைவ சித்தாந்தத்தில் ஆன்மக் கொள்கை, வெளியீடு எண்.540-2005, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-113).
இந்த ஆன்மம கொள்கையின் சாரத்தை சில நாட்களுக்கு முன்னர் “பற்றிடும் பற்றுக் கொள்வோம்” என எழுத்தில் ஒரு கவிதை பதிந்து இருந்தேன். அதன் சாரத்தை மட்டும் இங்கு மீள் பதிவிடுகிறேன்.
அப்பாலைக்கு அப்பாலாய்த் தோன்றும்
அகவிழி தன்னில் புலரும்
முப்பாற் புள்ளி எழுத்தன்ன
சோதியும் சுடரும் விளக்கும்
தப்பாமல் அவனுடன் சேர்த்திடும்
சுத்த அத்து வீதியமென
செப்பினேன் தெளிவு பிறக்க
சைவ சித்து ஆதி யந்தமே.
திருவாசகப் பெரும் பேரனுபவப் பனுவலில் உள்ள திருக்கழுகுன்றப் பதிகத்தின் ஆறாவது பாடல்,
”பேதம் இல்லதோர் கற்பளித்த
பெருந்துறைப் பெரு வெள்ளமே
ஏதமே பலபேச நீ எனை
ஏதிலார் முனம் என் செய்தாய்
சாதல் சாதல் பொல்லாமை அற்ற
தனிச் சரன் சரண் ஆம் எனக்
காதலால் உனை ஓத் நீ வந்து
காட்டினாய் கழுக் குன்றிலே”
வேதம் இல்லதோர் கற்பு என்பது, வேறுபாடு இல்லாத கல்வி என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதால், உண்மை ஞானத்தைக் குறிப்பது ஆகும். இவ்வாறு ஒத்த குலத்தவராய்
பரமும் ஆன்மாவும் அருளானந்தப் பெருவாழ்வில் அழுந்தி அனைவர்க்கும் நன்மை பயந்து நிற்கும் நிலை மணங் கமழ் தெய்வத்து இளை நலம் காட்டும் நிலை என்பதை
Physical stage, Meta physical stage, meta meta physical stage என நக்கீரரின் நான்கு அடிகளும் விளக்கிக் கூறுகின்றன
தெய்வீகம் பற்றிய ஆன்மிக உணர்வு மனித உள்ளத்தில் முகிழ்க்கும்போது மெய் அரும்பி விதிர்விதிர்க்கும் நிலை உண்டாகிறது. இதனை அச்சம் என்ற சொல் உணர்த்த வல்லது என்பதை விளக்கப் போந்த ருடால்ஃப் ஓட்டோ இலத்தீன் மொழியில் numen என்பதில் இருந்து Numinous எனும் சொல்லை உண்டாக்கி Mysterium Tremendum et fasscinans என்னும் தொடரால் விளக்குவார். அறிவுக்குப் புலப்படாமல், மறைந்துள்ளவற்றில் , நன்மை, எழில் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட தூய பொருளின் இயல்பை உணரும் பொழுது அச்ச உணர்ச்சி உண்டாகிறது. மறை பொருளாய் விதிர் விதிர்ப்பை உண்டாக்குவதாய் இருப்பதால் விலக்கலாம் என்றால், நம்மை விலக விடாமல், கவர்ச்சி உடையதாய் நம்மை ஈர்க்க வல்லது என்பதாலேயே இது “அணங்குசால் உயர்நிலை” அனுபவப் பொருளாகிறது
.
வளரும்
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
