சந்தனம் சுமந்த சந்தங்கள்

பவழமல்லி பூக்களாலான மலையொன்றின் மீது
ரோஜாக்களை முத்தமிட்ட தென்றல் மோதியது
இரு சுகந்த நறுமணங்கள் சந்தித்துக்கொண்ட சுப நொடியில்
இளஞ்சிவப்பு வானம் விலக்கி தங்கத் தூரிகைகள் பூரித்தெழுந்தன
வைகறை இட்டுச்சென்ற புள்ளிகளை இணைத்தன
அங்குமிங்குமாய் பறந்த ஆனந்தப் புள்ளினம்
விழித்தெழுந்த நீலவண்ணமோ செழித்திருக்கும் வயல்நோக்கி சிரித்தது
கோடி கொலுசுகள் பரவசமாய் அணிந்துகொண்டு
ஜதியுடன் பாய்ந்திட்டாள் அபிநய நதிமகள்
தேன்சிட்டுக்கள் பருகுவதற்க்கென்றே அதிகம் இனித்திருந்த சோலை
எலுமிச்சை தோட்ட நிழலில் இளைப்பாறும் ஏலக்காய் தேநீர் கோப்பை
ஆற்றோரம் மூங்கில் மொழி பரிமாறும் இசைப்பிரியன்
செம்பருத்தி புலர்ந்தவுடன் அதன் கண்ணில் தென்பட்ட பச்சைக்கிளி
சோளக்காட்டில் மாதுளை உரித்தபடியே துள்ளிச்சென்ற சிறுவர் கூட்டம்
இன்னும் எத்தனை எத்தனையோ எழில்சுரக்கும் தருணங்களில்
கைநிறைய அணிவித்த வளையல்களாய் சிணுங்கின என்
சின்னஞ்சிறு கவிதைகள்!

எழுதியவர் : மதுமதி . H (27-Jun-15, 12:33 am)
பார்வை : 109

மேலே