இருளின் ஒளி

மின்வெட்டு நீடித்தமையால்
மொட்டைமாடி சென்றேன்
நீண்டநாட்களுக்குப்பின்...!

தென்றலின் தோளில் மனம் இளைப்பாற
திங்களை வரவேற்று விடைபெறும்
ஞாயிறு வரைந்திழைத்த எழிலோவியம்
கண்டுகொண்டே விண்ணை வியந்திட்டேன்!

கண்கள் விரிய காட்சிகள் விரிந்தன-இல்லை
காட்சிகள் விரிய விரிய கண்கள் விரிவடைந்தன
''இத்தனை நாட்களாய் எங்கிருந்தாயடி பச்சைப் பேரெழிலே?!''
வியப்புடன் வினவினேன் மங்கும் மாலையில் பொங்கும்
அழகியலை

நமுட்டுச் சிரிப்புடன் கீழ்வானம் மேலும் சிவக்க, கரைந்தன
காகங்கள்:
''வராது வந்தவளே மின்வெட்டு வேண்டுமோ எமை
எட்டிப்பார்க்க?!...
வருடமாய் இங்கு தான் வாழ்ந்து வளர்கிறோம் 'ஒரே
கூட்டில்' ''
பலநூறு சிறகடிப்பின் ஓசையில் மௌனமாய் நான் இசைத்திருக்க
தேநீர் அருந்திக்கொண்டே வரிசையாய்க் காகங்கள்
வாஞ்சையுடன் அன்றைய பொழுதின் அனுபவங்களை பகிர்ந்தன...
சற்றே இமை சாய்த்து கீழே காண்கையில்.....
இருண்டு இறுகிய பல உயர்ந்த 'கட்டிடங்கள்'...
'வீடு'களைக் காணவில்லை!

எழுதியவர் : (27-Jun-15, 12:51 am)
பார்வை : 93

மேலே