படிப்பினை
''
''பளார்ர்!'' என அறைந்து விட்டு
''வெளியே போ! திரும்பி வராதே!'' என்று
கடுங்கோபமுடன் கூறி விட்டாள்!
கன்னத்தைத் தடவிக்கொண்டே
கண்ணீரை சிதறிக்கொண்டே
மீண்டும் அவளருகில்
மௌனமாய் நின்றவுடன்
சிறிதும் இரங்காமல்
உடும்புப் பிடி பிடித்து
தரதரவென இழுத்துச்சென்றாள்!
வாயிற் கதவில் மோதவிட்டு
தாளைத் திறந்து வெளியேற்றினாள்!
பூட்டிவிட்டு சாவியை தூர எறிந்து
''என் கனவில் கூட இனி அனுமதிக்க விருப்பமில்லை!
தொலைந்து போ!'' என சினந்தாள்! கண் சிவந்தாள்!
இனி எத்தனை நாட்கள் தான் கடந்தகால நினைவுகள்
உழலவைத்த சோகத்தில் சுகம்கண்ட வலிகள், தழும்புகள்
மனதை ஆட்டுவிக்கும்?
போதுமென பொங்கியவள் ''பளார்ர்!'' என அறைந்துவிட்டு
வெளியேற்றினாள் , விசும்புகின்ற நினைவுகளை!
தண்ணீர்த்துளிகள் முகத்தினைத் துளிர்ப்பிக்க
தெளிந்த வானமாகி அவள் மனம் இயற்றியது:
''இன்னும் பயணிக்க தூரமோ அதிகம்
இமைக்கும் கண்ணைப்போல் காலமோ துரிதம்
எண்ணிப்பார்த்திட்டால் யாருக்கில்லை துயரம்
திண்ணம் சேர்ந்திட்டால் பாரமில்லை அகிலம்!''
''
புத்தகம் மூடியவுடன்
என் உள்ளங்கை விரியத் திறந்து கொண்டது!
''பளார்ர்!''.

