சேனாதிபதியாய் என்னவன்!

அந்தியில் பூத்த மலராய் - நான்
ஆனந்தமாய் வீற்றிருக்க
செண்பக மலரை கைகளில் ஏந்தி
சேனாதிபதியாய் என்னருகில் என்னவன்!

எட்டுமுழ வேட்டியில் மனதை
கட்டிப்போட்ட கள்வனவன் - எனக்கு
மெட்டி போட்டு மெத்தனமாகின்றான்
பட்டான மேனியோ மொட்டாக மலர்ந்தது!

மீசை முறுக்கி நேசம் கொண்டு - அவன்
வீசும் பார்வையின் வீரியத்தில்
என் ஓசை யாவும் மொத்தமாய் அடங்கியது
ஆசைகள் அனைத்தும் வரமாய் வந்தது!

நகப்பூச்சு பூசிய கால் விரல்கள்
மண்ணோடு கலந்து கோலமிட - என்
மன்னவனின் சட்டை வாசத்தில்
மயங்கிய மனதை இருக்கிப் பிடிக்கின்றேன்!

முன்னவனின் மூச்சுக் காற்றின் வெப்பம்
மூக்கினருகே மெல்லமாய் சூடேற்ற
முத்தாய்ப்பாய் இட்ட முத்தத்தில் - என்
முந்தானையில் முகம் புதைக்கின்றேன்...

தனித்து நிற்க தைரியமின்றி
தவழ்ந்து செல்லும் மேகங்களை
துணைக்கு நிற்க தூதுவிடுகின்றேன்
துவளும் விழியாலே விழிக்கின்றேன்!

என் கண்களில் காதலைக் கண்டவன்
இதழ்களில் காணும் ரேகையில்
ஆருடம் பார்க்கின்றான் அவன் அதரங்களால்
வேறிடம் நகராமல் நானும் நனைகின்றேன்...

தேடிய பொழுதுகள் தீர்ந்த நிலையில்
உறவின் தொடர்புகள் உணர்வால் நிரம்ப
அங்கமாய் இருந்த நெஞ்சங்கள் - இங்கு
சங்கமம் ஆனது மஞ்சத்தில்!

எழுதியவர் : Premi (13-May-11, 11:49 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 291

மேலே