மறத்த மன்னிப்பு

சின்னஞ் சிறு கவளங்களாய்
என் காதலைப் பிசைந்து
ஊட்டுகின்றாய்-ஏனோ
பசியினை உணரவேயில்லை
விரல்களில்
உள்ளம் சமைக்குமுந்தன்
அடுத்த பிடிச்சோறில்
சிந்திச் சிதறுகின்றது அருகாமை..

ஒரு அடி
முன்னேறும் விழிகளில்
வேற்று மனித
மிருகமாய்ச் சிலாகித்து
நகங்களிழந்த பாதவிரல்களுக்கு
நீயே வழி(லி)யென்று
உணர மறுத்தவனாகின்ற
விருட்சத்தில்
எனது பற்றுக் கிளை ஒடிந்தது....

எனக்கென்ன
இதயத்தின் வேர்களில்
பூக்களா கிடைக்கும்
மண்ணுதிரக் கைகட்டியவனிடம்....

எந்த தேசத்திலும்
மனமோடு கூடுகட்டுவதே உறவு
கலைப்பதில்லையே
கனவாகிலும்....

காமமென்ன
காதலின் துணிச்சலா?
தேசிய அடையாளமா?
பிறப்புறுப்புத் தகுதியா?

வாழ்வினைத் தீர்மானிக்க
வயது தேவையில்லை
வரமே தேவை.....
அதுவன்றிச் சாபமாய்
அலைபேசுமுந்தன் குரலில்
மௌனங்களையே தேடுகின்றது
அருகிவரும் தீர்மானம்....

ஹிட்லர் எனக்குள்
ஒலிந்தார் (ஒலிந்தாரே தான் ஒளியல்ல)
மணமேடை
மரணத்தில் மலர் தூவியதாய்....

ஒரேயொரு நாளில்
விளங்கலாம்
உனது முன்கோபங்கள்
சிதைக் கட்டைகளென
சாம்பலை மீறிப் பறக்கும்
சுவாசக் கோளாற்றில்....

பூக்காரப் பெண்களிடம்
முழங்களாக விற்பனையாகும்
வேண்டாமென்ற சொல்லில்
நிற்கவேயில்லை
உனது நவநாகரீகம்....

பிடிக்கவேயில்லை
புதியதொரு அத்யாயம்
புரட்டும் முன் - பெருந்தோல்வியென
மூடிக்கிடக்கட்டும்
சாத்திரமோதும் எதார்த்தம்....

வடிகட்டிய சூழலில்
ஆடை விழுந்த பாலாகவே
ஒதுக்கப்படும் நினைவுகளில்
ஆறிவிடுகின்றது
எதிர்பார்ப்பு...!

-புலமி

எழுதியவர் : புலமி (28-Jun-15, 11:38 pm)
பார்வை : 128

மேலே