உயர்ந்தவர்கள்
"ஏம்மே..இதுக்குள்ள
கிளம்பிட்ட"..என்ற
மேஸ்திரியின்
விஷமப் பார்வை..
அவளை சூடாக்கி இருக்கலாம்..
"அம்மா..இன்னிக்காவது
இட்டிலி செய்து குடும்மா"..
என்று ஏக்கமாய்
சிணுங்கிய
இரண்டாவது பையனின்
மூக்கொழுகல் ..
முனகல்..
அவளை எரிச்சல் படுத்தியிருக்கலாம்..
அவள் வேலைக்கு போய் வந்து
கஞ்சி காய்ச்சும் போது
குடி போதையில் விழுந்து கிடந்த
கணவனை கொண்டு வந்து
வீட்டில் சரித்து விட்டு போன
ரிக் ஷா வண்டிக்காரன்
சிரித்தபடி நகர்ந்தது கூட
அவளை கலங்க வைத்திருக்கலாம்..
ஆனால் ..
அவள் கண்கள் குளமானது
இவை எதனாலும் இல்லையாம்..
"ஒங்க கூட இருந்து
என்ன சுகத்த கண்டேன்னு
சொல்லிவிட்டு எவனோட ஓடலாம்னு
பார்க்குறன்னு"..
போதை இல்லாமலேயே கேட்ட
புருஷன நினைத்து தானாம்..
மாற்றுத்திறனாளியான
முதல் பிள்ளை
இதை சொல்லி அழுததை
கேட்க நேர்ந்தது!
அவ்வளவுதான்!