காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்

தூண்களின்றி கட்டப்பட்ட வான்வெளியில்
அணிநடை வகுக்கும் சிட்டுக்களே..............!!!
உங்கள் கூட்டத்தில் பறந்த பெயர் தெரியா
பட்சியொன்றின் இறக்கை மண்ணை நோக்கி
பயணித்துக்கொண்டிருக்கிறது வீழ்வதற்காய்.

தென்றலும் அழகு கொடுத்த பறவையின்
நிலைமை கண்டு இறகை மண்ணில் விழாமல்
தூக்கி பறந்தது சோகத்தோடு.......,
தடையில்லா பாதையில் பயணிக்க எண்ணி
கடல்வழியாய் யாத்திரை தொடங்கியது.

திரைகள் தேடும் கரையில்
மண்ணை காணவில்லை
களவாடிச் செல்கிறான் ஒருவன்.
மீன்கள் கொப்பளிக்கும் நீரலைகள்
குப்பையால் மூடப்பட்டிருந்தது.
மனிதனால் போடப்பட்ட கழிவுகளே!!
இப்படி நாற்றமடிக்கிறது என்றால்
எறிந்த உள்ளம் எப்படி நாற்றமடிக்கும்,
சிறகும் மூக்கை பொத்திக்கொண்டது.

ஓர் ஆச்சரியம் குன்றுகள் மட்டும்
அலையால் மோதும் அழகுக்காட்சி.
என் எண்ணம் சீர்குலைந்தது,
பள்ளியில் படிக்கும் காதல் ஜோடிகள்
காதலை படுக்கையின் முத்திரையாய்
ஒதுக்கும் விபச்சார தடங்கள் குன்றின்
ஒதுங்குப்புறம்..,சிறகு நினைத்தது பாடத்திட்டத்தில்
பாலுணர்வு பாடம் சேர்க்கப்பட்டதோ காரணமோ?

அந்தி சாயும் நேரம் வரை பயணம் நீடித்தது.
பந்தி களைந்த கூட்டத்தில் தனிமையில்
கண்ணாம் பூச்சி ஆடிடும் இந்த பிள்ளைகள் யார்?
வினவியது சிறகு தென்றலும் புயலாய்
விகாரமடைந்து சொன்னது "அனாதை"

பயணத்தில் சோர்வடைந்து மரக்கிளையில்
கண்கள் அயர இறங்கியது இறக்கை.
ஓங்கி உயர்ந்த ஆலமரம் நிழலிலும் இனிமையான தண்மை.
கண்களில் சில வயதான தாய்கள் உறங்குகின்ற காட்சி
தோள்கள் வரண்டு இருக்கிறது.மீண்டும் வினவியது
இவர்கள் யார்?
"கரு கொடுத்து தெருவில் வந்தவர்கள்"
சிறகும் மெளனம் காத்து பேசியது
"ஐய்யறிவு கூட்டம் நாங்களா?இல்லை
ஆறறிவு மந்தைக் கூட்டம் மாந்தர்களா?"

கவிக் குறிப்பு:தோழர் கவிஞர் குமரேசன் கிருஷ்ணன் அவர்களால் தொடங்கப்பட்ட இக்கவித் தொகுப்பின்
27ம் பாகத்தை வருடைய அனுமதியுடனும் ஏனைய நண்பர்கள் எழுதிய படைப்பை படித்த பின் கிடைத்த
பின்னூட்டத்தாலும் நான் எழுதிய கவி இதுவே!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Jul-15, 10:08 am)
பார்வை : 170

மேலே