கடல் கடந்த பறவைகள்
கடல் கடந்த பறவைகள் நாங்கள்
தினம் கண்ணீர் விடும் பறவைகள்
தாய்த் தேசம் தள்ளி வந்து
தினம் தவிக்கின்ற பறவைகள்
தாயவளின் பாசம் இல்லை
தாய்மொழிக்கோ மதிப்பு இல்லை
தோழனவன் தோள்களில்லை
துயரம் சொல்ல நாதியில்லை
செல்வமீட்ட சென்றுள்ளான் என்று
சிலர் அங்கே சொல்லிடலாம்
செத்து செத்து வாழும் வாழ்க்கை
சிலருக்கேனும் தெரிந்திடுமோ?
தந்தையின் கடனடைக்க
தாயுமவள் நோயுடைக்க
தம்பியவன் மேல்படிக்க
தங்கையவள் மணமுடிக்க
பொறுப்புகள் எல்லாம் பொறுப்பாய் கையசைக்க
புலம் பெயர்ந்த பறவை நாங்கள்
நோய்கள் வந்து நோகும் வேளை
நெஞ்சம் தொட கைகளில்லை
நினைவால் வரும் மழைக்கு மட்டும்
நித்தம் இங்கே பஞ்சமில்லை
மணம்முடிந்த மறுநாளே மனையவளை பிரிந்திட்டோம்
மழலை மொழி கேட்கவில்லை
மயக்கும் நடை பார்க்கவில்லை
தூரம் தந்த பிரிவதனால்
துயரம்தானே எங்கள் பிள்ளை
காலங்கள் தொலைத்து வந்தோம்
கடமைகள் முடித்து வந்தோம்
கனவுகள் சுமந்து வந்தோம்
நினைவினில் மிதந்து வந்தோம்
தனிமையில் தவம் செய்து
தாய்மண்னை தொட்டு நின்றோம்
குடும்பத்தோடு கொஞ்சிப் பேசி
கூடியிருந்த பொழுதொன்றில்
மனைவியவள் மொழியுரைத்தால்
மகனவனும் மேல்படிக்க
மகளவளும் மணமுடிக்க
.
.
.
மீண்டும் இதோ..
உயிர்மூச்சை பெருமூச்சாய்
உள்ளிழுத்து செல்கின்றோம்
தாய் நாட்டின் நேசத்தையும்
தமிழ் மொழியின் வாசத்தையும்...
இவன் கடமை முடியாதோ?
இவன் மரணமும் இங்கு கிடையாதோ?